‘பொம்மை நாயகி’ சினிமா விமர்சனம்

விளிம்புநிலை மனிதர்களிடம் சட்டம் எவ்வாறு தன் கடமையைச் செய்கிறது என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டும் படங்களின் வரிசையில் புதுவரவு.
அப்பா மகள் பாசப்பிணைப்பில், சமூகத்தில் பெருகிவரும் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை மையப்படுத்திய கதைக்களத்தில் ‘பொம்மை நாயகி.’
தொடர்ந்து அழுத்தமான கதையம்சமுள்ள படங்களைத் தயாரிக்கிற இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தரமான இன்னொரு படைப்பு!
யோகிபாபு டீ கடையில் வேலை செய்பவர். கடலூர் மாவட்ட கிராமமொன்றில் மனைவி, மகள் என எளிய வாழ்க்கை வாழ்பவர். அவருடைய மகளிடம் அக்கம் பக்கத்தைச் சேர்ந்த சிலர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட அவர்களிடமிருந்து மகளை காப்பாற்றுகிறார்.
சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உயர்சாதிக்காரர்களாகவும், பணபலம் கொண்டவர்களாகவும் இருக்க அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பது சவாலாக இருக்கிறது. அவருக்கு துணைநிற்க ‘தோழர்‘கள் முன்வர சட்டப் போராட்டம் சூடுபிடிக்கிறது. அதன் விளைவு என்ன என்பது கிளைமாக்ஸ். இயக்கம் ஷான்
அப்பாவியான எளிய மனிதர் கதாபாத்திரத்துக்கு யோகிபாபு சரியான தேர்வு. தன் அடையாளமான காமெடியை மொத்தமாக தூக்கிப் போட்டுவிட்டு வறுமைச் சூழல், இயலாமை, சாதியில் தாழ்வு என தன் காதாபாத்திரத்தின் கனம் உணர்ந்து களமிறங்கியிருக்கிறார். மகள் மீது காட்டும் பாசம் நெகிழ வைக்க, தன் சொந்த அண்ணனாலேயே வஞ்சிக்கப்படும்போது அமைதியாக கோபத்தைக் காட்டுவது, சட்டத்தை வளைக்க நினைக்கும் அதிகார வர்க்கத்திடம் துணிச்சலாக மோதுவது என காட்சிக்கு காட்சி கவனம் ஈர்க்கிறார்.
கதைப்படி, அந்த காமப்பசி இழிபிறவிகள் தன்னிடம் எதற்காக நெருங்கினார்கள், எதற்காக காயபப்டுத்தினார்கள் என புரியாத வயது. நிஜத்திலும் அதே வயது என்பதால் சிறுமி ஸ்ரீமதியிடமிருந்து இயல்பான நடிப்பை பெற முடிந்திருக்கிறது. வெல்டன்!
யோகிபாபுவின் மனைவியாக சுபத்ரா, அப்பாவாக ஜி.எம். குமார், அண்ணனாக அருள்தாஸ், சட்டம் தெரிந்த கம்யூனிஸ்ட் போராளியாக ஹரி, பிச்சைக்காரி போல் வந்து யதார்த்தமான விஷயங்களை எளிய வசனங்களால் எடுத்து வீசுகிற ராக்ஸ்டார் ரமணியம்மாள், வழக்கறிஞராக லிஸி ஆண்டனி, நீதிபதிகளாக மைபா நாராயணன், எஸ் எஸ் ஸ்டேன்லி என அத்தனை கதாபாத்திரங்களும் அவரவர் நடிப்பில் கச்சிதம்!
தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் சுமையா இந்த படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி. மனதில் நிற்கும்படியான ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்!
சாமிக்கு காணிக்கையிட உண்டியல் எடுக்கப் போகும்போது அந்த சிறுமிக்கு அசம்பாவிதம் நேர்வது உள்ளிட்ட காட்சிகள் மூலம் புரிந்துகொள்ள அநேக விஷயங்கள் இருக்கிறது!
சுந்தரமூர்த்தியின் இசையில் ‘அடியே அடியே’, ‘வானம் தாயாக’ பாடல்கள் இதம்தர, பொம்மை நாயகி கோயிலின் திருவிழா பாடலில் உற்சாகம் தெறிக்கிறது.
எளிய மனிதர்கள் என்னதான் புரட்சி, போராட்டம் என சுற்றிச் சுழன்றாலும் சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வை, சட்டங்களில் இருக்கும் ஓட்டையை, நீதியை விலைக்கு வாங்கும் பணபலம் கொண்டோரின் செல்வாக்கையெல்லாம் ஒரே நாளில் தீர்க்க முடியாது என்ற உண்மையை உரக்கச் சொல்லி சொல்லி முடித்திருப்பது நச்!
பொம்மை நாயகி – எளிய மனிதர்களின் வலியிலும் வழிபிறக்கும் என்பதற்கான சான்று!
SpiralNews.in Rating 4 / 5