சேலஞ்சிங் ஸ்டார் தர்ஷனுக்கு ஜோடியாக அறிமுகமாகும் நடிகை மாலாஸ்ரீயின் மகள்!

மறைந்த பிரபல கன்னட தயாரிப்பாளர் ராமு மற்றும் பிரபல சீனியர் நடிகை மாலாஸ்ரீ ஆகியோரின் மகள் ராதனா ராம் முதன்முதலாக கன்னட திரையுலகின் சேலஞ்சிங் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் தர்ஷன் ஜோடியாக ‘D56’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

பெங்களூரில் உள்ள ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் ஆசிரமத்தில் நேற்று வரலட்சுமி பண்டிகை நன்னாளில் இந்த படத்தின் துவக்க விழா பூஜை நடைபெற்றது.

நிகழ்வில் கலந்துகொண்ட ஸ்ரீ ரவிசங்கர் குருஜி படத்தின் முதல் ஷாட்டை துவங்கி வைத்தார். ராக்லைன் புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் இந்த படத்தை தயாரிக்கிறார். ராபர்ட் பட புகழ் தருண் சுதிர் இந்த படத்தை எழுதி இயக்குகிறார்.இந்த நிகழ்வின்போது பேசிய சீனியர் நடிகை மாலாஸ்ரீ, “கன்னட திரை உலகில் முதன் முதலாக அறிமுகமாகும் எனது மகள் ராதனா ராமுக்கு திரையுலகை சேர்ந்தவர்களும் மீடியாக்களும் தங்களது வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் அளிக்க வேண்டும்… ராக்லைன் வெங்கடேஷ் என்னுடைய படம் மூலமாக தயாரிப்பு துறையில் நுழைந்தார். இன்று எனது மகள் அவருடைய தயாரிப்பு நிறுவனம் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆகிறார். அவர் ஒரு நல்ல குழுவுடன் இணைந்து அறிமுகமாவது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.

அவர் மிக சிறிய வயதிலேயே நடிகையாக வேண்டும் என விரும்பினார். அதற்காக மும்பையில் நடிப்பு மற்றும் நடனத்திற்காக பயிற்சி எடுத்துக்கொண்டார் உண்மையிலேயே கடந்த சில வருடங்களாக அவர் கடினமாக உழைத்தார் அவர் என்னுடைய மகள் என அடையாளப்படுத்தப்படாமல், தனக்கான ஒரு பாதையை தானாகவே தேர்ந்தெடுக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்” என கூறினார்.

ராதனா ராம் பேசும்போது, “சேலஞ்சிங் ஸ்டார் தர்ஷனுடன் அறிமுகமாவது திரில்லிங்காக இருக்கிறது. இந்த படத்தில் நடிப்பதற்காக எனக்கு வாய்ப்பு வந்தபோது நிச்சயமாக என்னாலேயே நம்ப முடியவில்லை. நான் ஒரு நடிகையாக வேண்டும் என்று தான் விரும்பினேன். அதனால் திரையில் என்னை வெளிப்படுத்துவதற்காக கடந்த சில வருடங்களாக நிறைய பயிற்சிகளை பெற்று தயாராகி உள்ளேன். என்னுடைய பெற்றோரைப்போல ரசிகர்களும் என்னை ஆசீர்வதிப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.

தர்ஷன் நடிப்பில் தயாராகும் இந்த ‘D56’  ஆக்சன், பொழுதுபோக்கு இரண்டும் கலந்த அதே சமயம் சமூகத்திற்கு ஒரு கருத்தை சொல்லும் படமாக இருக்கும். இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் பெங்களூரில் இந்த படத்திற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள அரங்குகளில் நடைபெற இருக்கிறது. ராபர்ட் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் சுதாகர் ராஜ், படத்தொகுப்பாளர் கேஎம் பிரகாஷ் உள்ளிட்ட தொழிநுட்ப குழுவினர் இந்த படத்திலும் இணைந்து பணியாற்ற இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

WhatsApp