‘செஞ்சி’ சினிமா விமர்சனம்

மறைந்திருக்கும் புதையலில் மிஞ்சியிருக்கும் ரகசியம் ‘செஞ்சி’ தரும் அனுபவம்!
நம் நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவரும், பாண்டிச்சேரியிலிருக்கும் தனது தாத்தா வீட்டுக்கு பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த ஒரு இளம்பெண்ணும் பழங்கால ஓலைச்சுவடியை வைத்துக் கொண்டு, பெரும் புதையலை எதிர்பார்த்து புறப்படுகிறார்கள். ஓலைச்சுவடியோடு கிடைத்த வழித்தட வரைபடத்தின் துணையோடு செஞ்சி, மதுரை, ராஜபாளையம், கல்லார், தென்காசி என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளின் காடு, மலைகளில் தேடல் தொடர்கிறது.
கிராமத்தில் சிறார்கள் சிலர் தாங்கள் செய்த விளையாட்டுத்தனமாக தவறுகளால் ஊர்ப் பஞ்சாயத்து கூடி கண்டிக்கும் அளவுக்கு ஆளாகிறார்கள். அதனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி காட்டுக்குள் போய் ஆபத்தில் சிக்குகிறார்கள்.
அதே காட்டுக்குள் பயங்கரவாதிகள் சிலர் காட்டில் துப்பாக்கிகளுடன் சுற்றித்திரிகிறார்கள்.
மூன்று தரப்பும் எப்படி, எங்கு இணைகிறார்கள் என்பதும், புதையல் வேட்டைக்கு புறப்பட்டவர்களின் முயற்சிக்கு கிடைத்த பலன் என்ன என்பதும் படத்தின் நிறைவுக் காட்சி!
படத்தை இயக்கியிருப்பதோடு, கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளராக வருகிறார் ஜி.சி. என்கிற கணேஷ் சந்திரசேகர். ஓலைச்சுவடியை படித்து தனது நுட்பமான மூளையால் அது சொல்ல வரும் குறிப்புகளை உணர்வது, புதையல் இருக்குமிடத்தை கண்டறிவது, புதையலை நெருங்கியபின் பயங்கரவாதிகளால் ஆபத்து நேரும்போது அதிலிருந்து சாமர்த்திய சாகசத்தில் ஈடுபடுவது என பலவற்றை செய்து கவனம் ஈர்க்கிறார்.
கதைப்படி பிரான்ஸ் நாட்டுப் பெண்ணாக வருபவர் ரஷ்ய நடிகை கெசன்யா. நடிப்பு கச்சிதம்!
மாங்காய் திருடி மாட்டிக் கொள்கிற வாண்டுகள் கலகலப்பூட்டுகிறார்கள். புதையலைக் கண்டதும் அவர்கள் உற்சாகத்தில் ஆடுப்பாடுவது ரசிக்க வைக்கிறது!
பயங்கரவாதிகளின் தலைவனாக வருகிற யோகிராம் மட்டுமே முன்பு படங்களில் பார்த்த முகமாக தெரிகிறது. மற்ற எல்லோரும் புதுமுகங்கள்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலுள்ள மலைகளை, காடுகளின் பசுமையை, புகழ்பெற்ற செஞ்சிக் கோட்டையின் மிச்சசொச்சங்களை அழகாக காட்டியிருக்கிறது ஒளிப்பதிவாளர் ஹரிஷ் ஜிண்டேவின் கேமரா.
எல்.வி. முத்து கணேஷின் பின்னணி இசை நேர்த்தி. ‘தங்கம் தங்கம்’ பாடல் உற்சாகம் தருகிறது.
ஓலைச்சுவடியை ஆராய்தல், புதையலைத் தேடுதல், பயங்கரவாதிகளுடன் போலீஸார் மோதுதல் என கதை என்னவோ கொஞ்சம் சுவாரஸ்யம்தான். திரைக்கதையிலும் அதே சுவாரஸ்யம் இருந்திருக்கலாம்!
SpiralNews.in ரேட்டிங் 3 / 5