‘கடைசி காதல் கதை’ சினிமா விமர்சனம்

நிஜமாகவே வித்தியாசமான, நிஜமாகவே வில்லங்கமான கதைக்களத்தில் ஒரு படம்.
அந்த இளைஞன் அந்த இளம்பெண் மீது காதல்வசப்படுகிறான். தொடாமல் காதலிக்க சம்மதமென்றால் காதலை ஏற்கிறேன் என்கிறாள் அவள். முதலில் சம்மதிப்பவன் ஒரு கட்டத்தில் நிபந்தனையை மீறுகிறான். அதனால் அவள் அவனை விட்டு பிரிந்து போகிறாள். அந்த விரக்தியில் மனநலம் பாதிக்கப்படுகிற இளைஞன், மனிதர்கள் ஏற்காத ஒரு விபரீதமான செயலை செய்யவைத்து நடைமுறைக்கு கொண்டுவர முயற்சிக்கிறான்.
மனித குலத்துக்கு ஆபத்தானது என்பதால் அவனது முயற்சியை முறியடிக்க களமிறங்குகிறது காவல்துறை. அதன் பிறகு நடப்பதெல்லாம் சுவாரஸ்யம்… இயக்கம் ஆர்.கே.வி.
காதலன், காதல் முறிவால் விரக்திக்கு ஆளானவன், நிர்வாணமே சுதந்திரம் என எடுத்துச் சொல்லி மனிதர்களை பிறந்தமேனியாக வாழ வலியுறுத்துபவன் என ஒவ்வொரு பிரேமிலும் பாராட்டும்படி நடித்திருக்கிறார் அறிமுக நடிகர் ஆகாஷ் பிரேம்குமார்.
அழகு, இளமை, கதாபாத்திரத்துக்கேற்ற நடிப்பு என பலவிதங்களில் ஈர்க்கிறார் நாயகி ஈனாக்ஷி.
‘விஜய் டி.வி.’ புகழ், விஜே ஆஷிக் இருவரும் கலகலப்பூட்டுகிறார்கள்.
பிரியங்கா வெங்கடேஷ், அனு, பிரியதர்ஷினி, நிஷார், ஸ்வப்னா, கிருத்திகா, காவல்துறை அதிகாரியாக சாம்ஸ்… அனைவரின் நடிப்புப் பங்களிப்பும் நிறைவு. ‘கேபிள்’ சங்கர் தனித்து தெரிகிறார்.
சேத்தன் கிருஷ்ணா காட்சிகளுக்கேற்ற பின்னணி இசையைத் தர, நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்துள்ளார் சிவசுந்தர்.
அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்… குடும்பத்தோடு பார்க்க வேறு படங்கள் உண்டு. இது 18+ இளைய தலைமுறை ரசிப்பதற்கேற்ற காட்சிகள், வசனங்கள், காமெடிகள் நிறைந்த படம்.