‘மெய்ப்பட செய்’ சினிமா விமர்சனம்

நாடு முழுக்க பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதைக் கண்டு ஆதங்கப்பட்டதில், பாலியல் குற்றவாளிகள் அவ்வளவாக தண்டிக்கப்படுவதில்லை என்பதைக் கண்டு ஆத்திரப்பட்டதில் உருவான படம்!
கதாநாயகனுக்கு கதாநாயகியை காதலிப்பது தவிர உருப்படியாய் வெறெந்த வேலைவெட்டியும் இல்லை. அவர்களின் காதலுக்கு இரு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வர வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்கிறார்கள். தங்கள் கிராமத்தை விட்டு நண்பர்களோடு சேர்ந்து சென்னைக்கு இடம்பெயர்கிறார்கள். வாடகைக்கு வீடு பார்த்து குடியேறுகிறார்கள். அதன்பின்தான் அந்த வீடு சிட்டியிலேயே பெரிய தாதாவுக்கு சொந்தமானது என தெரிகிறது.
புதுமணத் தம்பதிக்கு அந்த தகவலே அதிர்ச்சியாக இருக்க, அவர்கள் அந்த வீட்டின் பின்பக்கத்தில் புதைக்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம் ஒன்றை கண்டறிகிறார்கள்.
கதையின் போக்கு இப்படியிருக்க… தாதாவின் வீட்டிலிருந்து பெண்ணின் சடலம் எனும்போதே என்ன நடந்திருக்கும் என சுலபத்தில் யூகிக்க முடிகிறது. நாம் யூகித்தபடியே நடந்திருக்க குற்றவாளிகளுக்கு காவல்துறையால் உரிய தண்டனை கொடுக்க முடியாமல்போக கதாநாயகன் கொந்தளிக்கிறான். அதன் விளைவு என்ன என்பது மிச்சசொச்ச காட்சிகளில்… இயக்கம் வேலன்
அடர்தாடி முகத்தை பெருமளவு ஆக்கிரமித்திருக்க அறிமுக நாயகன் ஆதவ் பாலாஜியின் கண்களில் அப்பாவித் தோற்றம் தெரிகிறது. அது அவரது கதாபாத்திரத்துக்கு சரியாய் பொருந்துகிறது. காதல் காட்சிகளில் மென்மையாக வெளிப்படுபவர், பெண்ணின் மரணத்துக்கு காரணமானவர்களை பழிதீர்க்க நினைக்கும்போது சூறாவளி வேகமெடுக்கிறார்.
லட்சணமாக, சதைப்பிடிப்பாக இருக்கிற மதுனிகா இயல்பாக நடித்திருக்கிறார். ‘ரெண்டு நிமிஷ சந்திப்பாலே’ பாடலில் அம்சமான தேகத்தின் அட்டகாசமான வளைவு நெளிவுகளை வஞ்சனையின்றி வழங்கியிருக்கிறார்.
நாயகனின் அப்பாவாக ‘சூப்பர்குட்’ சுப்பிரமணி, நாயகியின் அப்பாவாக இயக்குநர் ராஜ்கபூர், நேர்மையான காவல்துறை அதிகாரியாக ஓஏகே சுந்தர், தாதாவாக ‘ஆடுகளம்’ ஜெயபாலன், ஒரேயொரு காட்சியில் சாமியாராக ‘பயில்வான்’ ரங்கநாதன் அத்தனைப் பேரும் நடிப்புப் பங்களிப்பில் நிறைவு.
பலவருடங்கள் கழித்து பரணியின் இசை. காதல் ஊற்றெடுக்க ‘ரெண்டு நிமிஷ சந்திப்பாலே’, உணர்ச்சிபொறிபறக்க ‘பாரதமே பாரதமே’, குத்தாட்டம் போட கஞ்சப் பிசினாறியே’ என பாடல்களில் வெரைட்டி காட்டியிருக்கிறார்.
சண்டைக் காட்சிகளில் மிரட்டல் செல்வா, ஒளிப்பதிவில் ஆர்.வேல் அவரவர் பங்களிப்பில் நேர்த்தி!
கதைக்கருவாக்கத்தில், திரைக்கதையாக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
குற்றவாளிகளை சட்டம்தான் தண்டிக்க வேண்டும்; அதற்கு வாய்ப்பில்லை எனும்போது இதைத்தான் செய்யவேண்டியிருக்கிறது என ‘மெய்ப்பட செய்’ ஒரு தீர்வை சொல்கிறது. சரியோ தவறோ விரக்தி மனநிலையில் அதை ஏற்கத்தான் வேண்டியிருக்கிறது. அது சட்டத்தை கையில் வைத்திருப்போரின் தவறு!
SpiralNews.in Rating 3 / 5
