தலைவனை வெளியே தேடாமல் குடிமகன்கள் தன்னை தலைவனாக நினைக்க வேண்டும்! -இயக்குநர் பா. இரஞ்சித்தின் ‘நீலம் புக்ஸ்’ திறப்பு விழாவில் கமல்ஹாசன் பேச்சு

இயக்குநர் பா. இரஞ்சித் ‘நீலம் புக்ஸ்’ என்ற பெயரில் சென்னை எழும்பூரில் உருவாக்கியுள்ள புத்தக விற்பனையகத்தின் திறப்பு விழா இன்று (12.2.2023 / ஞாயிறு ) நடைபெற்றது.புத்தக வாசிப்பாளர்கள், ரசிகர்கள் என பெருந்திரளான கூட்டத்தினிடையே திரைக்கலைஞர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விற்பனையகத்தை திறந்து வைத்தார்.

விழாவில் அவர் பேசும்போது, ”உயிரே உறவே தமிழே… இந்த வாக்கியத்தை நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தி இருந்தாலும் இதுதான் என்னுடைய வாழ்க்கையின் உண்மை தத்துவம். அலங்காரத்திற்காக சொல்லும் வார்த்தை அல்ல இது. இந்த உறவு இருந்தால்தான் என்னால் உயிர்வாழ முடியும். இது மூன்றையும் காக்க வேண்டியது என் கடமை.

பா. ரஞ்சித்தின் ஆரம்ப விழாக்களிலெல்லாம் நான் கலந்து கொள்ளவில்லை. ஆனால் நானும் அவரும் இல்லாத போதும் இருக்கும் தாக்கம் இது. அரசியல் என்பதை தனியாகவும், கலாச்சாரத்தை தனியாகவும் வைத்திருக்க வேண்டிய நிர்பந்தத்தில் நாம் இருக்கிறோம்.

நாம் உருவாக்கியதுதான் அரசியல். ஆளும் கட்சி, ஆளுகிற கட்சி என்ற வார்த்தையே இனி வரக்கூடாது என்று நினைக்கிறேன். நான் நியமித்தவர் என்ற எண்ணம் மக்கள் மனத்தில் உதிக்கும் பட்சத்தில் ஜனநாயகம் நீடுழி வாழும். தலைவனை வெளியே தேடிக்கொண்டிருக்கும் தலைவர்கள் பலர் இங்கு குடிமகன்களாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தன்னளவில் தலைவன் தான் என்று நினைக்கும் பட்சத்தில் உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக இந்தியா வரக்கூடும்.

அரசியலில் என்னுடைய மிக முக்கியமான எதிரி சாதிதான். நான் அதை இன்று சொல்லவில்லை; அதை நான் 21 வயதில் இருந்தே சொல்லிக்கொண்டே இருக்கிறேன். இப்போது நான் அதனை தரமான வார்த்தைகளில் பக்குவமாக சொல்கிறேன். ஆனால் கருத்து மாறவே இல்லை. சக்கரத்திற்கு பிறகு மனிதனின் மாபெரும் சிருஷ்டி கடவுள். அதை மறந்து விடாதீர்கள். நம்முடைய உருவாக்கம் நம்மையே தாக்குவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதன் கொடூரமான ஆயுதம் சாதி.இது எனக்கு மூன்று தலைமுறைகளை முன்னர் இருந்த அம்பேத்கர் காலத்தில் இருந்து சொல்லப்பட்டு வந்து கொண்டிருக்கிறது; ஆனால் இன்றும் நடந்த பாடில்லை; எழுத்து வேண்டுமானால் வேற வேறாக இருக்கலாம். ஆனால், மய்யமும் நீலமும் ஒன்றுதான்” என்றார்.

22

Leave a Reply

Your email address will not be published.