‘நெடுநீர்’ சினிமா விமர்சனம்

பிரச்சனைகளுக்குத் தீர்வாக வன்முறையை கையிலெடுத்தவன் படும்பாட்டை பகிர்கிற ‘நெடுநீர்.’
கதாநாயகன் சந்தர்ப்பச் சூழலால் காதலியை பிரிகிறான். தாதா ஒருவரின் அடியாளாகி வெட்டுக்குத்து, கொலை என வாழ்நாளை ரத்தச் சகதியாக்கிக் கொள்கிறான்.
சில வருடங்கள் கழித்து காதலியை சந்தித்தபின், ரத்தத்தில் ஊறிப்போன வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சராசரி வாழ்க்கைக்கு திரும்ப நினைக்கிறான். தாதாவிடமிருந்து விலகும் முடிவுக்கு வருகிறான்.
தாதா அவனை விடுவதாயில்லை. அவனால் பாதிக்கப்பட்டவர்களும் அவனை தீர்த்துக் கட்ட துரத்துகிறார்கள்.
அவன் அவர்களிடமிருந்து தப்பித்தானா? காதல் கை கூடியதா? எதிர்பார்த்த வாழ்க்கை கிடைத்ததா? என்பதே ‘நெடுநீர்’ தந்திருக்கிற கதை.
நாயகனாக ராஜ்கிருஷ். நடிப்புக்கு புதுமுகம். அப்பாவியான அவர் தன்னை சீண்டுகிறவர்கள் மீது சீற்றம் காட்டுவது மிரட்டல். சண்டைக் காட்சிகளில் அதிரடிப் பாய்ச்சல் நிகழ்த்தியிருப்பவர் காதல் காட்சிகளில் அடக்கி வாசித்திருப்பது கதைக்களத்துக்கு பொருத்தம்!
நாயகியாக அறிமுக நடிகை இந்துஜா. வெகுளித்தனத்தை பிரதிபலிக்கும் அவரது தோற்றம் கிராமத்துப் பெண் கதாபாத்திரத்துக்கு பொருந்திப் போகிறது. நடிப்புப் பங்களிப்பில் குறையில்லை!
தாதாவாக சத்யா முருகன். அவரிடமிருந்து பலமான கதாபாத்திரத்திற்கேற்ற வளமான நடிப்பு!
நண்பனை தாக்கியதற்கு பழி தீர்க்கத் துடிக்கும் இளைஞர்களின் நடிப்பும் கச்சிதம்.
முதலாளியின் மகனிடம் தன் பலத்தைக் காட்டிவிட்டு, தானே முன்வந்து பலியாகும் மதுரை மோகனும் கவனம் ஈர்க்கிறார்.
கடலை குறிக்கிற இன்னொரு சொல் நெடுநீர். அதற்கேற்ப கடலூரின் கடலோர கிராமம் கதைக்களமாக விரிய, அந்த களத்தின் நீள அகலத்தை லெனின் சந்திரசேகரன் தனது ஒளிப்பதிவில் முடிந்தவரை ரசிக்கும்படி காட்டியிருக்கிறார்!
ஹித்தேஷ் முருகவேலின் பின்னணி இசையும், பாடல்களும் கதையின் கைபிடித்து கூட்டிப் போகிறது!
வன்முறைப் பாதையை தேர்ந்தெடுத்தால் அதிலிருந்து மீள்வது எந்தளவு கடினம் என்பதை எளிமையான கதையில் எடுத்துக் காட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குநர் கு.கி. பத்மநாபன். அதற்காக அவரை பாராட்டலாம். அடுத்தடுத்த படங்களில் கருவாக்கத்திலும் உருவாக்கத்திலும் மெருகேறுவார் என்று நம்பலாம்!