இயக்குநர் கௌதம் மேனன் வெளியிட்ட ‘நினைவெல்லாம் நீயடா’ படத்தின் மோஷன் போஸ்டர்!

‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’ சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட ‘அருவா சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை திரைக்கதை வசனங்களை எழுதி இயக்க, இசைஞானி இளையராஜாவின் 1417-வது படமாக உருவாகி வருகிறது ‘நினைவெல்லாம் நீயடா.’
இந்த படத்தில் பிரஜன் கதாநாயகனாக நடிக்க மனிஷா யாதவ் மற்றும் சினாமிகா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இளம் நாயகன் நாயகியாக ரோஹித் – யுவலட்சுமி ஜோடி நடிக்க, முக்கிய கதாப்பாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்த படத்தின் மோஷன் போஸ்டரை, இளம் ரசிகர்களின் இதயம் கவர்ந்த இயக்குநரும், தனது மாறுபட்ட நடிப்பால் முன்னணி நடிகராக உயர்ந்து வருபவருமான கௌதம் வாசுதேவன் மேனன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”இசைஞானி இந்த படத்திற்காக அசத்தலான ஐந்து பாடல்களை உருவாக்கி தந்திருக்கிறார். அதில் ‘இதயமே …இதயமே…’ என்று தொடங்கும் பாடலை இளையராஜா எழுத ‘யங் மேஸ்ட்ரோ’ யுவன் சங்கர் ராஜா பாடியிருக்கிறார். இந்த பாடல் நிச்சயமாக ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடிப்பது உறுதி. பழநிபாரதி, சினேகன் எழுதியிருக்கும் மற்ற பாடல்களும் ரசிகர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமரும். மனசுக்குள் தோன்றிய முதல் காதல் மண்ணுக்குள் போகும் வரை மறக்காது என்ற கருத்தை மையமாக வைத்து இளமை துள்ள இந்த படத்தை உருவாக்கியிருக்கிறேன்.
பள்ளி பருவத்து காதலை கொண்டாடிய ‘அழகி’ ‘ஆட்டோகிராப்’, ‘பள்ளிக்கூடம்’, ‘காதல்’, ’96’ படங்களின் வரிசையில் ‘நினைவெல்லாம் நீயடா’ படமும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பது உறுதி. விரைவில் முதல் பாடல் வெளியிடப்பட இருக்கிறது” என்றார்.
இந்த படத்திற்கு ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பை கவனித்திருக்கிறார். முனிகிருஷ்ணன் கலை அமைக்க சண்டை காட்சிகளை பிரதீப் தினேஷ் அமைக்க, நடன காட்சிகளை தினேஷ் மற்றும் தீனா மாஸ்டர்கள் வடிவமைத்திருக்கின்றனர். தயாரிப்பு நிர்வாகம் இளங்கோ.