‘பத்து தல’ சினிமா விமர்சனம்

திரைப்படங்களில் ‘காவல்துறையின் பார்வையில் குற்றவாளி; மக்களில் பலருக்கு காவல் தெய்வம்‘ என்ற வரையறைக்குள் வாழ்கிற தாதாக்கள் பற்றிய கதைக்களம் எப்போதுமே பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்தவை. அப்படியொரு தாறுமாறான சப்ஜெக்டில் ‘பத்து தல.’
மணல் கொள்ளையில் ஓங்கி வளர்ந்து, மாநிலத்தை யார் ஆளலாம் என்று தீர்மானிக்கிற அளவுக்கு மாபெரும் சக்தியாக இருக்கிறார் ஏஜிஆர்.
பணபலம், தன்னை யாரும் சுலபத்தில் நெருங்கமுடியாத பாதுகாப்பு பலம், மக்களின் மனதுக்குள் அசைக்க முடியாத இடம் என்றிருக்கிற அவரை போட்டுத்தள்ள சிலர் வலைவிரிக்கிறார்கள். சட்டமும் தன் பங்கிற்கு அவருக்கு உலை வைக்க துரத்துகிறது. அப்படி தனக்கெதிராய் தலையெடுப்பவர்களை ஏஜிஆர் களையெடுப்பதே ‘பத்து தல’யின் மொத்த கதை…
கன்னட ‘மஃப்டி’யை தமிழ் சினிமாவுக்கும் சிம்புவின் ரசிகர்களுக்கும் ஏற்றபடி மறு உருவாக்கம் செய்திருப்பது ஓபிலி கிருஷ்ணாவின் அட்டகாச அட்டம்ப்ட்!
ஏஜிஆராக சிலம்பரசன் டிஆர். முகம் மறைக்கும் தாடியும், இளமை மறைக்கும் பாடி லாங்வேஜுமாய் மனிதர் திரையில் தோன்றும்போதெல்லாம் விசில் சத்தத்தால் தியேட்டர் அதிர்கிறது. கம்பீர நடை, கரகரத்த குரலில் வசன உச்சரிப்பு, எதிரிகளை துவம்சம் செய்யும்போது சுனாமியின் சீற்றம் என சிம்புவின் நடிப்பில் அனல் பறக்கிறது. ‘நம்ம சத்தம்’ பாடலுக்கு ஆடும் நடனத்தில் உற்சாகம் பெருக்கெடுக்கிறது. நெகிழவைக்கும்படியான நடிப்பைப் கொட்ட தங்கை மீது பாசம் காட்டும் காட்சியும் உண்டு.
மிகச்சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் பிரியா பவானி சங்கரின் துடிப்பான நடிப்பு சுவாரஸ்யத்துக்கு உதவுகிறது.
தாதாவை வீழ்த்த தோதான வழிகளைக் கண்டறிந்து முன்னேறுகிற கெளதம் கார்த்திக், தனக்கான சவால்களை மல்லுக்கட்ட முறுக்கேறிய உடற்கட்டைப் பயன்படுத்தியிருக்கிறார். கதையின் ஓரு ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் மெல்லிய காதல் எபிசோடுக்கு உயிரூட்ட இயல்பான நடிப்பை பரிமாறியிருக்கிறார்.
மனதின் பகை நொறுங்கி அண்ணன் சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும்அனு சித்தாராவின் நடிப்பில் நல்ல உயிரோட்டம்!
சிங்கா என்ற கனமான வேடத்தில் உடலளவில் கனமான மதுகுருசாமி, ஜோ மல்லூரி, சவுந்தர்ராஜா, சந்தோஷ் பிரதாப், ரெடின் கிங்ஸ்லி, கண்ணன் பொன்னையா, தீரஜ் கெர், நமோ நாராயணன், சென்ட்ராயன், குழந்தை ஹர்ஷிதா என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள். அவர்களில் யாரையும் வீணாக்கவில்லை!
நடிகராக அறிமுகமாகியிருக்கும் கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு கவனம் ஈர்க்கும் வேடத்தை தந்திருக்கிறது திரைக்கதை. மிக முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் ஓபிலி கிருஷ்ணாவும் நடித்திருக்கிறார்.
தேகத்தின் பாகம் அத்தனையும் குலுங்க ஆட்டம்போட்டு நாடிநரம்புகளில் மின்சாரம் பாய்ச்சுகிறார் ஆர்யாவின் சம்சாரம்!ஏஜிஆர் எனர்ஜியாக ஆட்டம்போட ‘அக்கரயில’ பாடல் தந்த ஏஆர்ஆர், கிளுகிளுப்பான ‘ராவடி’ பாடலில் கிறங்க வைக்கிறார். பின்னணி இசையில் காட்சிகளின் விறுவிறுப்புக்கு தேவையான வீரியமிருக்கிறது!
ஒளிப்பதிவின் பிரமாண்டத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார் ஃபரூக் ஜெ பாஷா.
பிரவீன் கே எல்.லின் எடிட்டிங் படத்தின் பலம்.
குறிப்பிட்டுச் சொல்ல சில குறைகள் இருந்தாலும் சிம்பு ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றதை செய்திருப்பதற்காக ‘பத்து தல’க்கு பாராட்டுக்கள் பல!