கலைஞர் செய்ததை மு.க.ஸ்டாலின் செய்யவேண்டும்!-‘ஸ்ட்ரைக்கர்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு

ஜஸ்டின் விஜய் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக வித்யா பிரதீப் நடித்துள்ள படம் ‘ஸ்ட்ரைக்கர்.’ எஸ்.ஏ பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில்  முக்கிய வேடத்தில் ராபர்ட் மாஸ்டர், கஸ்தூரி, அபிநயாஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா 27.1. 2023 அன்று மாலை சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் சுசீந்திரன், பேரரசு, சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன், நடிகர் இமான் அண்ணாச்சி, பாரதமாதா மணிமாறன், நடிகர் ஆர்.எஸ் கார்த்திக், விஜய் டிவி நவீன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில் இயக்குநர் எஸ்.ஏ பிரபு பேசும்போது, “இந்த படம் பாரா சைக்காலஜி ஹாரர் ஜானரில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் கதை பிடித்து போனதால் படத்தின் கதாநாயகன் ஜஸ்டின் தான் இந்த படத்திற்கான தயாரிப்பாளர்களை ஆர்வமுடன் தேடினார். யூடியூப்பில் பார்த்த அஸ்வின் என்கிற குறும்படத்திற்கு இசையமைத்திருந்த விஜய் சித்தார்த்தின் இசையால் ஈர்க்கப்பட்டு அவரை இந்த படத்திற்கு இசையமைப்பாளராக தேர்வு செய்தோம். என்னுடைய கல்லூரி காலத்திலிருந்து நண்பராக தொடர்ந்து வரும் ஹரிசங்கர் ரவீந்திரன் இந்த படத்தின் மூன்று பாடல்களையும் எழுதியுள்ளார். பெரிய பாடலாசிரியராக ஒப்பந்தம் செய்யலாமே என முதலில் தயாரிப்பாளர் தயங்கினாலும் ஹரிசங்கர் எழுதிய முதல் பாடலை பார்த்துவிட்டு அனைத்து பாடல்களையும் அவரே எழுதும்படி கூறிவிட்டார்.இந்த படத்திற்கு பொருத்தமான டைட்டில் என்பதால், டோரா பட இயக்குனர் தாஸ் தான் அவரிடம் இருந்த இந்த ஸ்ட்ரைக்கர் டைட்டிலை எனக்காக கொடுத்தார்” என்றார்.

படத்தின் நாயகன் ஜஸ்டின் விஜய் பேசும்போது, “என்னுடைய பயணத்தை ஒரு விஜே ஆகத்தான் ஆரம்பித்தேன். காஞ்சனா, மெட்ராஸ் திரைப்படங்களில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்தேன். எனது நடிப்பிற்கு லாரன்ஸ் மாஸ்டர் தான் பிள்ளையார் சுழி போட்டு துவங்கி வைத்தார். இசையமைப்பாளர் விஜய் சித்தார்த்திடம் அவரது தவறுகளை சுட்டிக்காட்டினாலும் அவரை பாராட்டினாலும் இரண்டையும் ஒரே மாதிரி எடுத்துக் கொள்ளக்கூடிய நல்ல மனிதர். இந்த படத்தை அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் விதமாக எடுத்துள்ளோம். இந்த படத்திற்கு பின்னணி இசை அமைத்தவர்களில் விடி மோனிஷ் இந்த நேரத்தில் எங்களுடன் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது” என்றார்.

இயக்குனர் பேரரசு பேசும்போது, “பிரபலமான கதாநாயகர்கள் எல்லாம் பத்து படங்கள் நடித்து ஒரு இடத்தை பிடித்த பிறகுதான் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களை தயாரிப்பாளர்களிடம் கதை சொல்ல அனுப்பி வைப்பார்கள். ஆனால் தனது முதல் படத்திலேயே ஒரு இயக்குனரை தயாரிப்பாளரிடம் கதை சொல்ல அனுப்பிய நடிகர் ஜஸ்டின் நிச்சயமாக ஒரு முன்னணி ஹீரோவாக வருவார். ஆங்கிலம் கலக்காமல் பாடல் எழுதிய ஹரிசங்கருக்கு வாழ்த்துக்கள். நானும் பாடல் எழுதிய புதிதில் இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று பல பேர் கேட்டார்கள். ஆனால் அடிப்படையில் நான் கவிஞன். அப்புறம் தான் கதாசிரியர்..

அதேபோல எம்எஸ்வி, இளையராஜா இவர்களுடைய காலகட்டங்களில் குறிப்பிட்ட அளவிலான பாடலாசிரியர்கள், பாடகர்கள் மட்டுமே இருந்து வந்தார்கள். ஏ.ஆர் ரகுமான் வந்தபிறகு அந்த நிலை மாறி இன்று பல படங்களில் புதுவிதமான பாடலாசிரியர்களும் பாடகர்களும் இடம் பெற்று வருகிறார்கள். இதுதான் ஆரோக்கியமான விஷயம்.  இந்த படத்தில் ஒரு பாடலில் ராபர்ட் மாஸ்டரின் நடிப்பை பார்த்தபோது இவருடன் இணைந்து நடிக்கும் ஹீரோக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று சொல்ல தோன்றுகிறது.

கலைஞர் கருணாநிதி காலத்தில் தமிழில் டைட்டில் வைத்தால் வரி விலக்கு உண்டு என்கிற ஒரு சட்டத்தை கொண்டு வந்தார். அப்போது வெளியான அனைத்து படங்களுமே தமிழில் டைட்டில் வைத்து வெளியாகின. அஜித்தின் காட்பாதர் படம் கூட வரலாறு என்று பெயர் மாற்றி வெளியானது. ஆனால் இப்போது பல படங்களுக்கு ஆங்கிலத்தில் தான் டைட்டில் வைக்கிறார்கள்.. நான் கூட இந்தப் படத்தின் ஸ்ட்ரைக்கர் என்கிற டைட்டிலை பார்த்ததுமே போராளி என்கிற படமாக இருக்குமோ என்று நினைத்து விட்டேன். அதனால் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழ்ப்படங்களுக்கு தமிழில் தலைப்பு வைக்க வேண்டும் என்கிற சட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும். தமிழகம் தமிழ்நாடு என்று சொன்னால் மட்டும் தமிழ் வாழ்ந்து விடாது. அதை வாழ வைக்க வேண்டும்.

அதேபோல இன்று பலரும் இளைஞர்களுக்கு பிடிக்கும் படம் என்று சொல்லி படம் எடுக்க வருகிறார்கள்.. அந்த படங்கள் எல்லாம் ஒரு உயரத்திற்கு மேலே போகாது.. குடும்பத்தினர், குழந்தைகள் அனைவருக்கும் பிடித்தமான ஒரு படத்தை எடுக்க முயற்சிக்க வேண்டும். பிரபு என்கிற பெயர் கொண்ட நபர்கள் தமிழ் சினிமாவில் எப்போதுமே வெற்றியாளர்களாகவே வலம் வருகிறார்கள். இந்த படத்தின் இயக்குனர் எஸ்ஏ பிரபுவும் அப்படி ஒரு வெற்றி இயக்குனராக உருவெடுப்பார்” என்று வாழ்த்தினார்.

பாடலாசிரியர் ஹரிசங்கர் ரவீந்திரன் பேசும்போது, “கவிஞர் கண்ணதாசன் எழுதிய வசந்த கால நதியினிலே பாடல் போல, இந்த படத்தில் ஒரு பாடலை அந்தாதியில் எழுதியுள்ளேன். இதற்கு முன்னதாக பாசமலர், பொன்னூஞ்சல், வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் பாடல் எழுதியுள்ளேன். நீ வருவாய் என தொடரின் டைட்டில் பாடலை எழுதியது நான் தான். ஆனால் எதிலுமே என்னுடைய பெயர் இடம் பெறவில்லை. இந்த படத்தில் தான் முதல் முறையாக எனக்கு பாடலாசிரியர் என்கிற அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதை எனது வாய்ப்புக்கான மேடையாக நான் பயன்படுத்திக் கொள்கிறேன்” என்றார்.

இந்த நிகழ்வில் நேரில் கலந்துகொள்ள முடியாத சூழலில் படத்தின் நாயகி வித்யா பிரதீப், சிறப்பு அழைப்பாளர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் வீடியோ மூலமாக படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். பலகுரலில் பேசக்கூடிய விஜய் டிவி புகழ் நவீன் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய்சேதுபதி ஆகியோரின் குரலில் படக்குழுவினரை வாழ்த்தியதை விழாவிற்கு வந்தவர்கள் அனைவரும் ரசித்து வரவேற்றனர்.

படக் குழு:-

தயாரிப்பு: ஹென்றி டேவிட், ஜஸ்டின் விஜய்.R

இயக்கம்: S.A.பிரபு

ஒளிப்பதிவு: மனீஷ் மூர்த்தி

இசை (பாடல்கள்): விஜய் சித்தார்த்

இசை (பின்னணி): விடி பாரதி மற்றும் விடி மோனிஷ்

படத்தொகுப்பு: நாகூரான் ராமச்சந்திரன்

பாடல்கள்: ஹரிசங்கர் ரவீந்திரன்

ஆடை வடிவமைப்பு: அகிலன் ராம்

கலை: ஆனந்த் மணி

நிர்வாக தயாரிப்பாளர்: ராஜேஷ் கிருஷ்ணா

மக்கள் தொடர்பு: ரியாஸ் கே. அஹமது

17

Leave a Reply

Your email address will not be published.