இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரிடம் வாழ்த்து பெற்ற திரைப்பட பத்திரிகையாளர்கள். புத்தாண்டு தினத்தில் உற்சாக கொண்டாட்டம்!

பிரபல பத்திரிகையாளர் கவிதா தலைவர் பொறுப்பு வகிக்கிற ‘தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்‘ (Tamil Movie Journalist Association – TMJA) புத்தாண்டு தினத்தில் உறுப்பினர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வது வழக்கம். அதேபோல் 2023-ம் ஆண்டின் முதல்நாளிலும் சந்திப்பு நடந்தது. சங்கத்தின் தலைவர் கவிதா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இந்த சந்திப்பில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் சங்கத்தின் உறுப்பினர்களுடன் கேக் வெட்டி புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ”இங்கு வருகை தந்துள்ள பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல உங்கள் குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள் அனைவரும் நலமோடும், வளமோடும், மகிழ்ச்சியோடும் நிறைவாக வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன். புத்தாண்டு தினத்தில் உங்களையெல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நான் பண்டிகைகள் கொண்டாடுவதில்லை. கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கி, அவர்களுடன் பிரியாணி சாப்பிட்டேன். அந்த தருணம் ஒரு இறைசக்தியை உணர்ந்த அனுபவம் ஏற்பட்டது.
நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். அதுதான் பண்டிகை. நாம் மட்டும் புத்தாடைகள் உடுத்தி பண்டிகை கொண்டாடுவதில் சந்தோஷம் கிடையாது. மற்றவர்களை சந்தோஷப்படுத்திப் பார்க்க வேண்டும். அதுபோல்தான் நான் ஒவ்வொரு பண்டிகைகளையும் கொண்டாடி வருகிறேன்” என்றார்.
நிகழ்வில் பத்திரிகையாளர் ஒருவர் ‘உங்கள் இளமையின் ரகசியம் என்ன?’ என்று கேட்க, ”என்னைப் பொறுத்தவரை எனது வயதைக் கூறுவதில் நான் தயக்கம் காட்டியதே கிடையாது. எனக்கு 82 வயது ஆகிவிட்டது என்று சலிப்பாக சொல்வதை தவிர்த்து, ஜஸ்ட் 82 வயதுதான் ஆகிறது என்று சொல்வேன்.
என்னுடைய 36 வது வயதிலிருந்து அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து ஜந்து நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு கடவுளை நினைத்து தியானம் செய்து வருகிறேன். அந்த எனர்ஜி தான் நான் உற்சாகமாக இருப்பதற்கு காரணம். நீங்களும் செய்து பாருங்கள். உணர்வீர்கள்” என்றார்.
தனது பேச்சின் நிறைவில், ”பத்திரிகையாளர்கள் பெரிய படங்களைப் பற்றி எழுதுவதோடு நின்றுவிடாமல் சிறிய பட்ஜெட் படங்கள் பற்றியும் எழுதி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்தார். பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கிற ‘வாரிசு’, ‘துணிவு’ படங்கள் வெற்றியடையவும் வாழ்த்தினார்.
சங்கத்தின் சார்பில் எட்டு பேரை கொண்ட புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘நலன் குழு’வினருக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் பயனாடை போர்த்தி வாழ்த்தினார்! மட்டுமல்லாது சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் 10 கிலோ வீதம் அரிசி வழங்கினார்.
நிகழ்வை சங்கத்தின் உறுப்பினரும், கவிஞருமான ஜெகன் கவிராஜ் எளிய தமிழ்நடையில் சுருக்கமாக, சுவையாக தொகுத்து வழங்கினார்.