‘விட்னஸ்’ சினிமா விமர்சனம்

விளிம்புநிலை மக்களின் விழிகலங்க வைக்கும் கதைகளை பல படங்களில் பார்த்தாயிற்று. யாரும் அணுகாத கோணத்திலிருந்து வீரியமான படைப்பாக வித்தியாசம் காட்டுகிறது ‘விட்னஸ்!’

நகரத்தில் சாலைகளை, தெருக்களை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்கிற கடைநிலைப் பணியாளர் இந்திராணி. அவருடைய மகன் பார்த்திபன், கல்லூரி மாணவன். அந்த இளைஞனை சிலர் கூட்டிப்போகிறார்கள். அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் அடைப்பை சுத்தம் செய்வதற்காக ‘மேன் ஹோல்’ வழியாக கழிவு நீர்த்தொட்டிக்குள் (மலக்குழி) இறக்கிவிடுகிறார்கள். அவன் இறந்து போகிறான்.

மகனை இழந்த இந்திராணிக்கு துணிச்சல் மிக்க சிலர் உதவ முன்வர, மகனுடைய மரணத்துக்கு காரணமானவர்கள் மீது வழக்கு தொடர்கிறார்.

சம்பந்தப்பட்ட குடியிருப்பின் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள், துப்புரவுப் பணியின் முதன்மைப் பொறுப்பிலிருக்கிற அரசாங்கத்தின் உயரதிகாரி என பலரும் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்கள்; விசாரணைக்கு ஆளாகிறார்கள்.

பணம், ஆளுமை, அதிகாரம் என எல்லாவற்றிலும் உயர்நிலையில் இருப்பவர்கள் ஒருபக்கம். கடைநிலைப் பணியாளர், சாதியாலும் தாழ்ந்தவர், மகனை இழந்தவர் என பரிதாபத்தின் உச்சத்திலிருக்கிற இந்திராணி இன்னொரு பக்கம்.

இந்த நிலையில் சட்டம் தன் கடமையை எந்த லட்சணத்தில் செய்கிறது என்பதே விட்னஸின் கதையோட்டம்…

கழிவு நீர்த் தொட்டிக்குள் மனிதர்கள் இறங்கிச் சுத்தம் செய்வது சட்டவிரோதம். அந்த சட்டத்தை மதிக்காதவர்களால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்கதை. அப்படியான மரணத்துக்கு காரணமானவர்களில் ஒருவரைக்கூட நமது சட்டம் இதுவரை தண்டிக்கவில்லை. இந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் அழுத்தமான திரைக்கதையமைத்து இயக்கியிருக்கிறார் தீபக். அவரே, வலியைப் பதிவு செய்யும் இந்த படத்தின் ஒளிப்பதிவையும் ஏற்றிருக்கிறார்!

கிளைமாக்ஸில் சினிமாத்தனத்தை கைவிட்டு, இன்னும் எத்தனை வருடங்கள் சமத்துவம், சமநீதி என பேசினாலும் யதார்த்தம் இதுதான் என முடித்திருப்பது தனித்துவம்!

நடை, உடை, பேச்சு என கடைநிலை தூய்மைப் பணியாளராகவே மாறி, இந்திராணி கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் ரோகிணி. மகனை இழந்து கதறுவது, மகனது மரணத்துக்கு நீதி கேட்டுப் போராடுவது, தன்னை தரக்குறைவாக நடத்தும் சூபர்வைசரிடம் ஆத்திர ஆக்ரோஷம் காட்டுவது, சம்பளம் தரமறுப்போரின் சதிக்கெதிராக கொதித்துக் கொந்தளிப்பது என அவர் வருகிற காட்சிகளில் தருகிற நடிப்பு அத்தனை கனம்; கதைக்கு பலம்!

அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளில் ஒருவராக ஷ்ரத்தா ஸ்ரீநாத். தனக்கு நீச்சல் கற்றுக்கொடுத்த இளைஞன் மரணமடைந்ததை அறிந்து, மனம் கலங்கி அந்த மரணத்துக்கு நீதி கிடைக்க தன்னால் இயன்றதைச் செய்ய முயற்சிப்பதாகட்டும், அந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுபவர்களை அதட்டி அடக்குவதாகட்டும் தன் பங்களிப்பை கெத்தாக செய்திருக்கிறார் ஷ்ரத்தா!

அரசாங்க அதிகாரியாக அழகம் பெருமாள், வழக்கறிஞராக சண்முகராஜன், தொழிற்சங்கத் தலைவராக வருகிறவர்… அத்தனைப் பேரின் நடிப்பும் கச்சிதம்!

கதையின் முதன்மைப் பாத்திரத்தில் பார்த்திபனாக வருகிற இளைஞன் ஜி. செல்வாவின் இயல்பான நடிப்பும் ஈர்க்கிறது.

ரமேஷ் தமிழ்மணி இசையில் ‘பறவையாய் நாம் பறக்கிறோம்’ பாடல் மனதுக்கு இதம்!

சில காட்சிகள் ஆவணப் படம் பார்ப்பது போன்ற உணர்வைத் தந்தாலும், நமது சட்டதிட்டங்களின் அவலமான பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய விதத்தில் யதார்த்த சினிமாக்களின் வரிசையில் வைத்து கொண்டாடப்பட வேண்டிய படைப்பாகிறது ‘விட்னஸ்!’

இந்த படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் 2022 டிசம்பர் 9-ம் தேதி வெளியாகிறது.

SpiralNews.in Rating 4 /5 

26

Leave a Reply

Your email address will not be published.