ரூ.1 கோடி சம்பளத்தில் வேலை! எஸ்ஆர்எம் பல்கலைக்கழக மாணவருக்கு அமேசான் நிறுவனம் வழங்கிய ஆச்சரிய வாய்ப்பு!
சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் 2021 ஜூலை முதல் கடந்த ஏப்ரல் வரை டிசிஎஸ், சிடிஎஸ், கூகுள், அமேசான் விப்ரோ, இன்போசிஸ், எல் அண்ட்டி, டொயோட்டா, வால் மார்ட் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான முன்னணி நிறுவனங்கள் வளாக நேர்காணல் என்று சொல்லப்படுகிற கேம்பஸ்இன்டர்வியூ நடத்தி, அதன்மூலம் இறுதியாண்டு மாணவர்கள் 10,089 பேர் பல்வேறு நிறுவனங்களில் வெவ்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களில் பி.டெக். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினீயரிங் இறுதியாண்டு மாணவர் புரஞ்சாய் மோகனை, ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பளத்தில் அமேசான் ஜெர்மனி நிறுவனம் பணிக்குத் தேர்வு செய்துள்ளது ஆச்சரியப்படத்தக்க செய்தி!
அந்த மாணவரை ஊடகத்தினர் முன் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் ( 18.5. 2022 புதன் ) நடந்தது.
மாணவர் புரஞ்சாய் மோகனுக்கு எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர், பாரிவேந்தர் பாராட்டு தெரிவித்து வாழ்த்தினார். பல்கலைக்கழக இணைவேந்தர் பி.சத்தியநாராயணன், துணைவேந்தர் சி.முத்தமிழ்செல்வன், பதிவாளர் எஸ்.பொன்னுசாமி. வேலைவாய்ப்பு வழிகாட்டி இயக்குநர் வெங்கட சாஸ்திரி ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்று புரஞ்சாய் மோகனை ஊக்குவித்தனர்.
நிகழ்ச்சியில் பாரிவேந்தர் ‘‘எம்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் கேம்பஸ் இன்டர்வியூ வாயிலாக பணிக்குத் தேர்வு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு 8000 பேர் பல்வேறு பணிகளுக்குத் தேர்வு பெற்றார்கள்.. இந்த வருடம் வளாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியாகவும் பெருமிதமாகவும் உள்ளது” என்றார்.