உலக மக்களின் நலனுக்காக ‘நவசக்தி பீடம்’ நடத்தும் ‘நவசக்தி காருண்ய பஞ்சத ரக்ஷண்ய’ தொடர் யாகங்கள்! வீரராகவபுரம் காடுவெட்டி ஸ்ரீதேவி பச்சையம்மன் – ஸ்ரீதேவி கருமாரியம்மன் – வாழ்முனீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக தொடங்கியது!
‘ஆன்மிக ரத்னா’ ஸ்ரீலஸ்ரீ சீனிவாசன் சுவாமிகள் நிறுவிய ‘நவசக்தி பீடம்’, உலக மக்களின் நலனுக்காக ‘நவசக்தி காருண்ய பஞ்சத ரக்ஷண்ய’ யாகம் நடத்த துவங்கியுள்ளது.
18 சித்தர்கள், ரிஷிகள், யோகிகளின் ஆசியோடு இந்தியா முழுவதும் நடக்கவிருக்கிற இந்த தொடர் யாகங்களின் முதல் யாகம் சென்னைப் புறநகரான ஆவடியையடுத்த வீரராகவபுரம் காடுவெட்டி என்ற ஊரில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பச்சையம்மன், ஸ்ரீதேவி கருமாரியம்மன் இணைந்து அருள்புரிகிற ஸ்ரீ வாழ்முனீஸ்வரர் ஆலய வளாகத்தில் 15. 5. 2022 ஞாயிறன்று பெளர்ணமி நாளில் நடைபெற்றது.

ஆலயத்தின் பிரதான தெய்வங்களுக்கும், இன்னபிற பரிகார தேவதைகளுக்கும் காலை முதலே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மாலை 3 மணியளவில் தவில் – நாதஸ்வர மங்கள இசையுடன் யாகசாலை பூஜைக்கான ஆயத்தப்பணிகள் துவங்கப்பட்டது.
நவசக்தி பீடத்தின் நிறுவனரான ‘ஆன்மிக ரத்னா’ ஸ்ரீலஸ்ரீ சீனிவாசன் சுவாமிகள் தலைமையேற்று அருளுரை வழங்க, சிவனடியார்கள் பலரும் முன்னிலை வகிக்க, சங்கநாதம் முழங்க ஓதுவார்களின் கம்பீரமான குரலில் சம்ஸ்கிருதம் தவிர்த்து தமிழில் திருமந்திரங்கள் வாசிக்கப்பட்டு, பஞ்சபூதங்களை எழுந்தருளச் செய்வதற்கான பாடல்கள் பாடப்பட்டு யாகம் தொடங்கப்பட்டது.

எதற்காக யாகம் நடத்தப்படுகிறது என்பதை ஓதுவார்கள், எல்லோருக்கும் புரியும்படியாக தமிழில் எடுத்துச் சொன்னது நிகழ்வின் தனித்துவம்!
யாகத்தையொட்டி யாகம் நடைபெறுமிடத்தில் ஸ்ரீதேவி பச்சையம்மன் உற்சவர் அலங்கரிக்கப்பட்டு எழுந்தருளியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது!
பச்சையம்மனை, கருமாரியம்மனை, வாழ் முனீஸ்வரரை இஷ்ட தெய்வமாக வழிபடக்கூடியவர்கள், தொழிலதிபர்கள், ஊர்ப் பெரியவர்கள் என ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பச்சையம்மன் உற்சவர் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி நிகழ்வை சிறப்பித்தார்.

அப்போது உடகவியலாளர்களிடம் (Media) பேசிய நடிகர் செந்தில், ”ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட நான், உலக மக்களின் நலனுக்காக நடைபெறும் தொடர் யாகத்தின் முதல் நிகழ்வில் கலந்து கொண்டதை பாக்கியமாக கருதுகிறேன்” என்றார்.
நிகழ்வை ஆலய நிர்வாகிகள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.