450 உள்நாட்டு நிறுவனங்கள், 20 வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்கும் தோல் பொருட்கள் கண்காட்சி! இந்திய தோல் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் (IFMLEA) சென்னையில் பிரமாண்ட ஏற்பாடு!

இந்திய தோல் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் (IFMLEA) தோல் பொருட்கள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த கண்காட்சி சென்னை ஐடிசி கிராண்டு சோழா ஹோட்டலில் வரும் பிப்ரவரி 1 அன்று நடக்கவிருக்கிறது.இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில், ஐ.எப்.எல்.எம்.இ.ஏ. சங்கத்தின் (IFMLEA) தலைவர் கே.ஆர். விஜயன், பேசிய போது, “இந்திய தோல் உற்பத்தித் துறை என்பது சுற்றுச்சூழலின் மீது அக்கறை உடைய அமைப்பாகும். வெளியே சொல்லப்படுவதைப் போன்று அல்ல. மனச்சாட்சி உள்ள தொழில் துறையாக, நாங்கள் பல்வேறு அம்சங்களில் முதலீடு செய்துள்ளோம், செய்து வருகிறோம். குறிப்பாக, சுற்றுச்சூழல் பாதிப்புகளற்ற பொருட்களை உற்பத்தி செய்கிறோம், கழிவுநீர் வெளியேற்றத்தை முற்றிலும் தடுக்கும் முயற்சியை எடுத்துள்ளோம், கழிவுநீரைச் சுத்திகரிக்கும் பணியையும் செய்கிறோம். அதற்காக பசுமைத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதோடு, கழிவுகளில் இருந்து ஆற்றல் பெறும் முயற்சியை மேற்கொண்டுள்ளோம். சூரிய சக்தி உள்ளிட்ட மாற்று எரிசக்தி முறைகளைப் பயன்படுத்துகிறோம்” என்றார்.
“இவ்வளவு பிரமாண்ட தோல் கண்காட்சி வெற்றி பெற வேண்டுமென்றால், எங்கள் துறை நிறுவனங்களின் ஆதரவு இருந்தால் தான் அது சாத்தியம். இந்தக் கண்காட்சிக்கு, சபா குழுமமும் சாலிடாரிடாடும் முதன்மை ஸ்பான்சர்களாகவும், மைக்ரோபாக் மற்றும் ஜே.பி.எஸ். ஆகியவை துணை ஸ்பான்சர்களாக கிடைத்திருப்பதைப் பெருமையாக கருதுகிறோம். இந்தத் துறையின் வளர்ச்சிக்கு இந்தக் குழுமங்களோடு ஏற்பட்டுள்ள உறவை நாங்கள் வரவேற்கிறோம்” என்றும் விஜயன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சபா குழுமத்தின் தலைவர் எஸ்.கே. சபாபதி, “எங்களுடைய பெரும்பான்மையான பொருட்கள், பையோ பாலிமர்கள் மற்றும், மறுசுழற்சி செய்யத்தக்க கச்சா பொருட்களில் இருந்து தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாங்கள், உலோகங்கள் இல்லாத, உப்புகள் இல்லாத, குரோம் இல்லாத மற்றும் தண்ணீரே பயன்படுத்தாத தோல் பதப்படுத்தும் தொழில்நுட்பத்தையே உபயோகிக்கிறோம்.
நாங்கள் பின்பற்றும் துல்லியமான முறைகளினால், வழக்கமாக பயன்படுத்தப்படும் தண்ணீரில் இருந்து தற்போது 20 முதல் 25 சதவீத தண்ணீர் சேமிக்கப்படுகிறது. நாங்கள் பாதுகாப்பான இரசாயனங்களைப் பயன்படுத்துகிறோம், சுற்றுச்சூழல் பாதிப்பை, கரியமில உமிழ்வைக் குறைக்கவும் முயற்சி செய்கிறோம். மேலும், தோல் பொருட்கள் உற்பத்தித் துறையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தத் தக்க வழிமுறைகளைக் கொண்டு வருவதோடு, தொழில்நுட்ப ரீதியாக முன்னிலை வகிக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளோம்” என்றார்.
சபாபதி, தொடர்ந்து பேசிய போது, “சந்தைக்கு உதவி செய்திடும் வகையில், வேலூரில் பசைகளுக்கான (adhesives) மிக நவீனமான ஒரு தொழில்நுட்ப மையத்தை, ஹென்கல் நிறுவனம், சபா குழுமத்தோடு இணைந்து நிறுவ இருக்கிறது. இந்த மையம், ஷு தொழில்துறைக்குத் தேவைப்படும் பணியாளர்களுக்குப் பயிற்சி கொடுப்பதன் வாயிலாக, இந்தச் சந்தையில் தேவைப்படும் முன்னேற்றங்களைக் கொண்டுவருவதற்கான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தும்” என்றார்.
சாலிடாரிடாட் நிறுவனத்தின் பொது மேலாளர் ததீர் சயிதி, தமது உரையில், “தோல் உற்பத்தித் துறையின் அனைத்து மட்டங்களிலும் நிலையான, நியாயமான உற்பத்தி மற்றும் நுகர்வு நடைமுறைகளை கொண்டுவர முயற்சி செய்கிறது. தோல் பொருட்கள் உற்பத்தித் துறையில் புதுமையைப் புகுத்துவதில் நாங்கள் முன்னிலை வகிக்கிறோம். குறிப்பாக, தோல் பொருட்களை உற்பத்தி செய்யும்போது விழும் கழிவுகளைக் கொண்டு, தோல் போன்ற பொருட்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்துகிறோம்” என்றார்.
“சுற்றுச்சூழலுக்கு உகந்த ஃபேஷன் பொருட்களான பெண்களின் கைப்பை, டோட் பைகள், மடிக்கணினி பைகள், டஃபிள் பைகள், பிடிமாணங்கள் உள்ளிட்டவை, தோல் கழிவுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
‘கழிவுகளில் இருந்து ஃபேஷன் பொருட்கள்’ என்ற இந்த அணுகுமுறையினால், நிலையான மற்றும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தத்தக்க பொருட்கள் உற்பத்தி செய்ய முடியும். அது இத்துறையின் வளர்ச்சிக்கு பெரிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழலைக் கெடுக்காத பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று உலகமே பேசிக்கொண்டு இருக்கும் இந்தத் தருணத்தில், தோல் கழிவுகளில் இருந்து உற்பத்தி செய்து, மேம்படுத்துவதற்கும் சந்தைப்படுத்துவதற்கும் மிகப் பெரிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன” என்றும் சயிதி தெரிவித்தார்.
ஃபேஷன் ஷோ 23′ நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. யாவர் தாலா தமது உரையில், “தோல் பொருட்களின் கண்காட்சியில், கச்சா பொருட்களில் இருந்து உற்பத்தி செய்து முடிக்கப்பட்ட பொருட்கள் வரை அனைத்து பொருட்களும் காட்சிப்படுத்தப்படும். இந்த முக்கியமான கண்காட்சியில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து 450 நிறுவனங்களும், வெளிநாடுகளில் இருந்து 20 நிறுவனங்களும் பங்கேற்க உள்ளன.
இந்தக் கண்காட்சியின் ஒரு பகுதியாக, தோல் பொருட்கள் ஃபேஷன் ஷோ நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும், ஐடிசி கிராண்டு சோழாவில் வரும் பிப்ரவரி 1, 2023 அன்று அந்த ஃபேஷன் ஷோ நடைபெறும். தோல் பொருட்களின் ஃபேஷனில் சமீபத்தில் பாணிகளையும் டிசைன்களையும் இந்த ஃபேஷன் ஷோ காட்சிப்படுத்தும்.
முதன்முறையாக, லைஃப்ஸ்டைல் பிராண்டுகளான போர்ஸ்ச் மற்றும் பி எம் டபிள்யூ ஆகியவை தமது பொருட்களை இங்கே காட்சிப்படுத்தும். இந்த நிகழ்ச்சியின் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் மறுசுழற்சி செய்த தோலில் இருந்தே உற்பத்தி செய்யப்பட்டது என்பது தான் இந்நிகழ்வின் முக்கியத்துவமாகும்.
80 மாடல் அழகிகள் பங்குகொள்ளப் போகும் இந்த ஃபேஷன் ஷோவில், பல்வேறு மிஸ் இந்தியா அழகிகள் பங்குகொள்வர். இந்நிகழ்ச்சியை பாஸ்கரன் சந்திர சேகர் இயக்க, ராகுல் தேவ் ஷெட்டி இதனை வடிவமைத்துள்ளார்” என்று தெரிவித்தார் தாலா.
ஐ.எப்.எல்.எம்.இ.ஏ.வின் செயலாளர், அதங்கி செந்தில் நன்றியுரைற்றும்போது, தோல் தொழில் கண்காட்சிக்கும், ஃபேஷன் ஷோவுக்கும் ஆதரவு வழங்கிய நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த 36வது கண்காட்சி, இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு, மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
ஃபேஷன் ஷோவுக்கான டிக்கெட்டுகளைப் பெற இந்திய தோல் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தை அணுகவும் (es@iflmea.com மற்றும் +919176676622)
