600 கோடி லிட்டர் தண்ணீரை சேமிக்க ‘நண்பன் அறக்கட்டளை’யின் புதிய திட்டம்! தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் புதுக்கோட்டையில் தொடங்கி வைத்தார்!

எந்தவொரு பிரதிபலனும் எதிர்பாராமல் இயற்கை விவசாயம், மகளிர் மேம்பாடு, விளையாட்டு என பல்வேறு துறைகளில் ‘நண்பன் அறக்கட்டளை’ MFMN (Mother for Mother Nature) சமூகப் பணியாற்றி வருகிறது.

தற்போது ‘நண்பன் அறக்கட்டளை’ MFMN நீர் மேலாண்மைத் திட்டத்தின் மூலம் தமிழகத்திலுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குளம், நாச்சான் குளம், வருசாக்குளம் உள்ளிட்ட ஊர்களின் நீர்ப்பாசன குளங்கள், மற்றும் வாய்க்கால்களை தூர்வாரி ஆழப்படுத்தும் பணியை தொடங்கியிருக்கிறது.

இந்த பணியை அமெரிக்காவில் வாழும் தமிழரான நண்பன் குழுமத்தின் இணை நிறுவனர் ‘நண்பன்’ சக்திவேல் தலைமையேற்று செய்து வருகிறார். அவருடன் அவரது நண்பர் அமெரிக்காவில் வாழும் தமிழர் ‘நண்பன்’ பிரீத்தாவும் இணைந்து வழிநடத்துகிறார். அவர்களுடன் காவேரி டெல்டா பகுதியை சார்ந்த ‘நண்பன்’ நிமல் ராகவன், தங்ககண்ணன், சித்தார்த் ஆகியோரும் கைகோர்த்துள்ளனர்.இந்த திட்டத்தின் துவக்க விழாவில் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்வில் அவர் பேசுகையில்,”பொதுவாக எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உதவி செய்வதுதான் நண்பனின் இயல்பு. அதேபோல் இந்த நண்பன் அறக்கட்டளையின் வெளிநாடு வாழ் தமிழர்கள் எந்த பலனும் எதிர்பார்க்காமல் ரூ37.5 லட்சம் மதிப்புள்ள புதிய பொக்லைன் இயந்திரம் வழங்கி நீர் மேலாண்மைக்கு உதவுகிறார்கள்.

நீரின் தேவையறிந்து இவர்கள் செய்யும் உதவி மிகப்பெரியது. இந்த அறக்கட்டளை மேலும் வளர வேண்டும், இவர்கள் சமூகப் பணி தொடர வேண்டும்.

குழந்தைக்கு எப்படி தாய்ப்பால் முக்கியமோ அதே போல் மனித குலத்திற்கு நீரின் தேவை முக்கியம். அதை பாதுகாக்க வேண்டியது மற்றும் சுகாதாரமாக வைத்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமை” என்றார்.

விழாவில் கலந்துகொண்ட கோட்டாட்சித் தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் நண்பன் அறகட்டளையின் MFMN திட்டத்தை வழி நடத்திச்செல்லும் ‘நண்பன்’ சக்திவேல், ‘நண்பன்’ பிரீத்தா குழுவினரின் சேவையைப் பாராட்டினர்.

விழாவில் கலந்து கொண்டவர்களை நண்பன் அறக்கட்டளையின் ‘நண்பன்’ வேல்காந்த் வரவேற்று, நன்றி கூறினார்.

திட்டம் பற்றி அறக்கட்டளை நிர்வாகிகள் ”இந்த நீர் மேலாண்மைத் திட்டத்தில் சுமார் 410 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தை தூர்வாரி ஆழப்படுத்துவதன் முலம் 600 கோடி லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும். இதனால் கிட்டத்தட்ட 12,000 விவசாய பெருங்குடி மக்கள் பயன்பெறுவர். இந்த குளத்தை தூர்வாருவதன் முலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, நீர் 40 முதல் 100 அடிக்குள் தண்ணீர் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

இந்தப் பணியை செய்து முடிக்க இரண்டு மாத கால அவகாசம் தேவைப்படும். இந்த பணிக்காக புதியதாக ரூ. 37.50 லட்சம் மதிப்புள்ள பொக்லைன் எந்திரத்தை நண்பன் MFMN மக்கள் பயன்பாட்டுக்காக வழங்கியுள்ளது. இந்த 410 ஏக்கர் பரப்பளவுள்ள குளங்களை தூர்வார ஆகும் எரிபொருள் செலவான ரூ.3 முதல் ரூ.4 லட்சத்தை நண்பன் அறக்கட்டளை ஏற்கும்” என்றனர்.

சொந்த செலவிலேயே அனைத்து சமூகப் பணிகளையும் செய்து வரும் இந்த அறக்கட்டளை, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நீர் மேலாண்மை திட்டத்தை வலுப்படுத்தும் வகையில் மேலும் 10 புதிய பொக்லைன் இயந்திரங்களை வாங்க திட்டமிட்டுள்ளது.

தங்கள் பகுதியில் நீர் மேலாண்மை சம்பந்தப்பட்ட உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம். அதற்கான தொடர்பு எண்: 9962200666 மின்னஞ்சல்: farmers@nanbanfoundation.org

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp