திருப்பங்களும் திகிலும் நிறைந்த ‘ஜோதி’ திரைப்படம். அக்டோபர் 16-ம் தேதி கலர்ஸ் தமிழில்…

ஏராளமான திருப்பங்களையும், அதிரடி நிகழ்வுகளையும் கொண்ட, திகிலூட்டும் மர்மக் கதையான ‘ஜோதி’ திரைப்படம் வரும் அக்டோபர் 16-ம் தேதி மதியம் 2 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.
திகிலும், மர்மமும் கலந்த இத்திரைப்படத்தின் கதையமைப்புகளும், அதிரடி நிகழ்வுகளும் பார்வையாளர்களை இருக்கையின் முனைக்கே கொண்டுவந்து நிறுத்திவிடும் என்பது நிச்சயம்; ஆனால் அதே நேரத்தில் கண்களின் விளிம்பில் கண்ணீரை வரவழைக்கும் திறனும் கொண்டதாக இருக்கும்.
இந்த படத்தில் நடிகர் வெற்றி மற்றும் நடிகை ஷீலா ராஜ்குமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
ஏவி கிருஷ்ண பரமாத்மாவின் சிறப்பான இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் நடிகர் கிரிஷா குருப், நடிகர் மைம் கோபி, மற்றும் நடிகர் இளங்கோ குமரவேல் ஆகிய திறமையான நடிகர்களும் துணை கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
தாயாகும் பெரு விருப்பத்தைக் கொண்டிருக்கும் கருவுற்ற ஒரு பெண் அவளது குழந்தையை இழந்து விடும் சோக நிகழ்வை சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் இத்திரைக்கதை, மிக நேர்த்தியான திரைப்படமாக மிளிர்கிறது. பிரபல பாடகர் கே. ஜே. யேசுதாஸ் அவர்களின் மனதை வருடும் குரலில் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்கள் இத்திரைப்படத்தின் சிறப்பை இன்னும் அதிகமாக உயர்த்தியிருக்கின்றன.
கருவுற்ற தாயான அருள்ஜோதி (நடிகை ஷீலா ராஜ்குமார்) என்ற இளம் பெண்ணின் வாழ்க்கையை இத்திரைப்படம் சித்தரிக்கிறது. ஒரு நோயாளிக்கு சிகிச்சையளிப்பதற்காக கர்ப்பிணி பெண்ணான மனைவியை விட்டுவிட்டு அவளது கணவர் வெளியே செல்வதை தொடக்கக் காட்சியாக இத்திரைப்படம் கொண்டிருக்கிறது. அவர் வெளியேறிய சிறிது நேரத்திற்குள்ளேயே இப்பெண்ணின் வீட்டிற்குள் நுழையும் ஒரு மர்ம நபரை கருவுற்ற இப்பெண் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அக்கொடூர நபரின் தாக்குதலில் அருள்ஜோதி மயக்கமடைந்து உணர்விழக்க பிறக்கும் பச்சிளங்குழந்தையை அந்நபர் திருடிச் செல்வதோடு இரத்த வெள்ளத்தில் உயிரிழக்குமாறு விட்டுவிட்டு செல்கிறான். இந்த நிலையில் அருள்ஜோதி என்ற அந்த தாய் உயிர் பிழைக்கிறாளா மற்றும் உயிர் பிழைத்தால் அவளிடமிருந்து கவரப்பட்ட குழந்தையை திரும்பவும் எப்போதாவது கண்டுபிடிக்க முடியுமா என்பது இத்திரைக்கதையின் எஞ்சிய பகுதியாக விரிகிறது.
படம் குறித்து நடிகை ஷீலா ராஜ்குமார் “கருவுற்ற ஒரு தாயின் கதாபாத்திரத்தில் நடிப்பது சவால்மிக்கதாகவே இருந்தது. அதுவும் அளவற்ற அன்புடன் நேசித்த பச்சிளங்குழந்தையை அப்போது தான் இழந்திருக்கும் ஒரு இளம் தாயாக இத்திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது. மர்மத்தை அவிழ்க்க முற்படும் ஒரு புலனாய்வு திரைப்படமான இதில் ஒரு அங்கமாக இடம்பெற்றிருந்தது. உண்மையிலேயே வித்தியாசமான, ஆர்வமூட்டுகிற அனுபவமாக இருந்தது. கலர்ஸ் தமிழ் சேனலில் நான் நடித்த இத்திரைப்படத்தின் உலக தொலைக்காட்சி ப்ரீமியர் இடம்பெறுவது பார்க்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும்” என்றார்.