‘டாடா’ சினிமா விமர்சனம்

சமீபமாக தமிழ் சினிமாவை சுற்றி வளைத்திருக்கிற கத்தி, ரத்தம், துப்பாக்கிச் சூடு என்கிற வன்முறை வெறியாட்டத்துக்கு டாட்டா காட்டிவிட்டு, உணர்வுகளை வருடவும், உற்சாகமாய் சிரிக்கவும் வைக்கிற கதைக்களத்தில் ‘டாடா.’

கல்லூரி படிப்பைத் தொடர்கிற அந்த இளைஞனுக்கு சகமாணவியுடன் அரும்பிய காதலின் ஆழம், கட்டில் வரை பாய்கிறது. அவர்களுக்குள் உருவான காதலையும் அவளுக்குள் கருவான வாரிசையும் ஏற்க மறுக்கிறார்கள் இருதரப்பு பெற்றோரும்.

காதலர்கள், நண்பர்கள் உதவியோடு தனிக்குடித்தனம் போகிறார்கள். அவன் வேலையில் சேர்கிறான். அதில் கிடைக்கும் வருமானம் தாய்மையடைந்துள்ள காதலியை கவனித்துக் கொள்ள போதுமானதாக இல்லாத நிலை.

பணப் பற்றாக்குறை மனக்கசப்பைத் தூண்டிவிட, குழந்தை பிறக்கும்வரை கண்ணீரோடு நாட்களை நகர்த்திக் கொண்டிருந்த அவள், குழந்தை பிறந்ததும் அதை அவனிடம் விட்டுவிட்டு பெற்றோருடன் போய்விடுகிறாள்…

ஒரு பெண் தொப்புள் கொடியின் ஈரம் காயும்முன் தன் குழந்தையை தவிக்கவிட்டுப் போக சத்தியமாய் மனம் வராது. ஆனாலும் அது சாத்தியமாகியிருக்கிறது என்றால் அதற்கான காரணம் என்ன? தாயின் அரவணைப்பின்றி குழந்தையை வளர்த்து ஆளாக்குவதில் அந்த இளைஞன் சந்திக்கும் சவால்கள் என்னென்ன என்பதெல்லாம் திரைக்கதை… இயக்கம் கணேஷ் கே பாபு

கவின் ஆரம்பக் காட்சிகளில் துடிப்பான கல்லூரி மாணவன், அந்த பருவத்திலேயே ஒரு குழந்தைக்கு அப்பா, ஐடியில் வேலை பார்க்கும் இளைஞன் என தான் ஏற்ற பாத்திரத்துக்கு பொருந்திப் போகிறார்.

வாழ்க்கையில் வயதுக்கு மீறிய சுமையை சுமக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விரக்தியில் குடிப்பது, மனைவியைப் பிரிந்தபின் குழந்தையை வைத்துக் கொண்டு தவிப்பது, மகனை வளர்த்து ஆளாக்குவதில் மனைவியின் தயவை தேடிப்போகாமல் நான்காண்டுகளை கடப்பது என நீளும் காட்சிகளின் அத்தனையும் கனம். அதற்கேற்ப கவினிடமிருந்து வெளிப்படும் தேர்ந்த நடிப்பு பலம். சீரியஸான கதையோட்டத்தில், தற்கொலைக்கு முயற்சிக்கும் இளைஞனை காப்பாற்றும் காட்சி உட்பட கலகலப்பூட்டவும் வாய்ப்பிருக்கிறது கவினுக்கு. அதிலும் ஸ்கோர் செய்கிறார்.

லட்சணமாக இருக்கிற அபர்ணா தாஸுக்கு கவிதைத்தனமான ஒன்றிரண்டு ரொமான்ஸ் காட்சிகள் காட்சிகள் தவிர படம் முழுக்க மனம் நொறுங்கி நிற்கும் கதாபாத்திரம். குழந்தை பிறக்கும் தருணத்தில் பனிக்குடம் உடைந்து தனிமையில் சிக்கி தவிக்கும் காட்சிகளில் கலங்க வைக்கிறது அவரது நடிப்பு! கவினின் அப்பாவாக பாக்யராஜ், அம்மாவாக ஐஸ்வர்யா நடிப்பில் கச்சிதம்.

விலா எலும்புகள் விரிசல் விடும் அளவுக்கு குலுங்கிச் சிரிக்க வைக்கிறது விடிவி கணேஷின் அறிமுகக் காட்சி!

நண்பர்களாக வருகிற ஹரிஷ், இலன், கமல், பிரதீப் கவர்கிறார்கள்.

கன்னம் கிள்ளி முத்தமிட தோன்றும் விதத்திலிருக்கிறது, கவின் – அபர்ணாவின் குழந்தையாக வருகிற சிறுவனின் கியூட்டான நடிப்பு!

ஜென் மார்ட்டின் இசையில் ‘நம்ம தமிழ் ஃபோ(ல்)க்கு’ பாடல் ரசிக்க வைக்க, சாண்டி மாஸ்டரின் கோரியோகிராபியில் கவினின் நடனத்தில் உற்சாகம் தெறிக்கிறது.

எழிலரசனின் ஒளிப்பதிவு நேர்த்தி.

இந்த படத்தில் காட்டியிருப்பது போல், பச்சிளம் குழந்தையை ஆதரவற்றோர் காப்பகத்தில் கொண்டு சேர்ப்பது, திரும்ப பெறுவது என்பதெல்லாம் நிஜத்தில் அத்தனை சுலபமில்லை.

முன்பாதி காதல், கண்ணீர் என கடந்துபோக பின்பாதியில் சிரிக்க வைத்து

படிக்கிற வயசுல படிங்கப்பா’ என சொல்லாமல் சொல்கிற அறிவுரை

77

Leave a Reply

Your email address will not be published.