‘ஆகாச வீதிலு’ (Telugu) திரைப்பட விமர்சனம்

காதலையும் தாண்டி வாழ்க்கை இருக்கிறது என்ற கருத்தோடு ‘ஆகாச வீதிலு.’
படத்தின் நாயகன் இசைக்கலைஞனாக முன்னேறும் ஆர்வத்தில் இருக்கிறார். ஒரு அம்சமான பெண்ணுடன் காதலையும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் காமத்தையும் தொடர்கிறார். ஒரு கட்டத்தில் காதல் கைவிட குடி, போதை என வாழ்க்கை திசைமாறுகிறது. மாறிய திசையிலிருந்து அவர் மீண்டாரா இல்லையா? அவரது காதல் கை கூடியதா? இல்லையா? என்பதே ஆகாச வீதிலு’வின் கதை…
நாயகன் கெளதம் கிருஷ்ணா மேன்லியாக இருக்கிறார். காதல், காமம், கோபம், தவிப்பு, ஏக்கம், ஆக்ரோஷம் என காட்சிகளின் தேவைக்கேற்ப அளவாய் அழகாய் வெளிப்படுத்தி கவர்கிறார்.
நாயகி பூஜிதாவிடம் அழகு, இளமை, கவர்ச்சி எல்லாமும் குவிந்திருக்கிறது. நடிக்கவும் வருகிறது.
நாயகனின் அப்பா, நாயகியின் அப்பா, நாயகனின் நண்பர்கள் என படத்தில் நடித்திருக்கும் மற்றவர்களின் நடிப்பு கதைக்குப் பொருத்தம்.
சித் ஸ்ரீராமின் குரலில் உருக வைக்கும் பாடல், ஒருசில அதிர்வேட்டு உற்சாகப் பாடல் என கலந்துகட்டி கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜூடா சாந்தி.
படத்தில் லிப்லாக் முத்தக் காட்சிகளுக்கும், அதிரடியான சண்டைக் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை.
நாயகனே படத்தின் இயக்குநரும் என்பதால் தான் விரும்பியதை விரும்பியபடியே காட்சிப்படுத்தியுள்ளார். ஒருசில காட்சிகள் சலிப்பைத் தந்தாலும், இளைய தலைமுறை விரும்பும் அத்தனை கமர்ஷியல் மசாலாக்களும் இருப்பதால் ஆகாச வீதிக்கு நம்பிப் போகலாம்!