‘அயலி’ வலைத் தொடர் (WebSeries) விமர்சனம்

பெண்ணடிமைத் தனத்தை எதிர்க்க, விடுபட கல்வியொன்றே தீர்வு என பாடம் நடத்துகிற படம்!
பூப்பெய்தும் வரை மட்டுமே படிப்பு, பின்னர் மணவாழ்க்கையெனும் சிறையிலடைப்பு என பெண்களை வதைத்துக் கொண்டிருக்கிற கிராமம் புதுக்கோட்டையிலிருக்கும் வீரப்பண்ணை.
பெண் பூப்பெய்திய உடனே கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்பது அந்த ஊரின் விதிவிலக்கற்ற கட்டுப்பாடு; அப்படி செய்யாவிட்டால் ஊரைக்காக்கும் தெய்வமான ‘அயலி‘யின் சாபத்துக்கு ஆளாக நேரிடும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
அந்த கட்டுப்பாட்டிலும் நம்பிக்கையிலும் சிக்கி விரும்பியதைப் படிக்க முடியாமல், இளைமைக்கால சந்தோஷங்களை அனுபவிக்க முடியாமல், யாரோ ஒருவனுக்கு கட்டாயமாக மனைவியாகி, குழந்தை பெற்று, உருவம் உருக்குலைந்து என அந்த ஊர்ப் பெண்கள் 15 வயதுக்குள் சந்திக்கிற நெருக்கடிகள் அனைத்தும் நரக வேதனை…
சிறுமி தமிழ்ச்செல்வி அந்த நரகத்திலிருந்து விடுபட, மருத்துவப் படிப்பு வரை முன்னேற நினைக்கிறாள். அதற்காக சாதுர்யமாக சில திட்டங்களை வகுக்கிறாள். காலங்காலமாக மூடநம்பிக்கையில் ஊறிப் போயிருக்கிற அந்த ஊரை எதிர்த்து அவளது திட்டங்களை செயல்படுத்த முடிந்ததா? விரும்பியதை படிக்க முடிந்ததா? எதிர்பார்த்த விடுதலை கிடைத்ததா என்பதே கதையின் போக்கு…இயக்கம் முத்துகுமார்
வயதில் பூப்பெய்துகிற தருணம், பூப்பெய்திய பருவம் என இரண்டையும் வெளிப்படுத்த வேண்டும். நடிப்பில் ஒட்டுமொத்த கதையையும் தூக்கிச் சுமக்க வேண்டும். இப்படி கதைநாயகியின் பாத்திரம் மிகமிக கனமானது. அந்த பாத்திரத்துக்கேற்ற வயதிலிருக்கிற அபி நக்ஷத்ரா வெட்கச் சிரிப்பு, பருவப் பெண்ணுக்கான பூரிப்பு, கிராமத்துப் பெண்ணுக்கான எளிமை என அத்தனை அம்சங்களோடும் கச்சிதமாக வெளிப்படுகிறார்.
ஊரில் வயதுக்கு வரும் பெண்கள் சந்திக்கும் கொடுமைகளைப் பார்த்து கலங்குவது, அதேபோல் தன் வாழ்நாள் பாழாகிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பது, படிப்புக்கு ஊரார் மட்டுமின்றி ஆசிரியரே முட்டுக்கட்டையாக இருப்பதை சாமர்த்தியமாக எதிர்கொள்வது என நடிப்பில் சுழன்றடிக்கிறார்.
அவரது பார்வையிலிருக்கும் கூர்மை கவனம் ஈர்க்கிறது.
சின்னச் சின்ன செயல்களால் தன் பெற்றோரை, ஊரை ஏமாற்ற திட்டமிட்டு அது சாதகமாக அமையும்போது வெடித்தெழும் சிரிப்பைக் கட்டுப்படுத்தி புன்னகைப்பது,
தன் சீருடையிலிருக்கும் ரத்தம் யாருக்காவது தெரிந்துவிடுமோ என பயந்துகொண்டிருக்கும்போது சிறு விபத்து நேர்ந்து சிவப்பு நிற இங்க் கொட்டி ரத்தக்கறையை மறைத்துவிட துள்ளல் நடைபோட்டு வீட்டுக்கு போவது கொள்ளை அழகு!
அன்பான அம்மாவாக அனுமோல், கனிவான கண்டிப்பான அப்பாவாக ‘அருவி’ மதன் இருவரும் தேர்ந்த நடிப்பால் மனதில் நிறைகிறார்கள்.
கொடூரமான அம்மாவாக வெளிப்பட்டு பின்னர் பாசமுகம் காட்டும் காயத்ரி, வில்லனாக லிங்கா, ஊர்ப் பெரியவராக சிங்கம்புலி என கதை மாந்தர்கள் அத்தனைப் பேரும் தங்கள் பங்களிப்பை குறையின்றி செய்ய, ஒன்றிரண்டு நிமிடங்கள் எட்டிப் பார்க்கிற லெஷ்மிபிரியா, ஸ்மிர்தி வெங்கட், பக்ஸ் பகவதி பெருமாள் உள்ளிட்டோரும், தலைமையாசிரியராக வருகிற பெண்மணியும் கவர்கிறார்கள்.
வயதுக்கு வந்ததும் விதவிதமான தின்பண்டங்களை கேட்டு வாங்கிச் சாப்பிட்டு குஷியாவது, உடனடியாக குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்டு சீரழிவது என தனித்து தெரிகிறார் லவ்லின்!
பல படங்களில் அரசாங்க அதிகாரியாக, நீதிபதியாக ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டுமே வந்துபோகிற டிஎஸ்ஆர் தர்மராஜ் இதில் படம் முழுக்க வருகிறார். பெண்கள் அடிமையாகவே இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிற, தன்னிடம் படிக்கும் பெண்கள் மீது வெறுப்பை உமிழ்கிற கரடு முரடான பாத்திரத்தில் கவனிக்க வைக்கிறார். அவர் கோமாவிலிருந்து மீள்கிறபோது ஊரின் மாற்றங்கள் கண்டு குழம்புவது கலகலப்பு!
அவ்வப்போது திரளாக கூடிக்கலைகிற ஊர்மக்கள் கதைக்கும் கதைக்களத்துக்கும் சரியாகப் பொருந்துவதோடு, நடிப்பிலும் நேர்த்தி!
ரேவாவின் இசையில் ‘லே லே’, ‘பெண்ணே பெண்ணே அடியே அடியே’ பாடல் இதம். பின்னணி இசை காட்சிகளுக்கு பொருத்தம்!
மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளில் இருக்கும் மூட நம்பிக்கைகளை உடைத்தெறிகிற காட்சிகளில் இயக்குநரின் துணிச்சல் தெரிகிறது.
பரிதாபத்தை அதிகரிப்பதற்காக சில காட்சிகளை வலுக்கட்டாயமாக திணித்திருப்பது, தலைமையாசிரியர் தைரியமானவராக இருந்தும் ஊரின் அக்கிரமங்களை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு போகாதது, பெண் போலீஸ் ஊருக்குள் வந்துபோகும் போகிற நிலையிருந்தும் ஊரில் பெண்கள் துன்புறுத்தப்படுவதற்கு தீர்வு காண முயற்சிக்காதது, அதுவும் 1990 காலகட்டத்தில்… இப்படி குறிப்பிட்டுச் சொல்ல ஏராளமான குறைகள் இருந்தாலும்,
இந்த தொடரை பார்க்கும் பெண்கள் கதைநாயகியோடும், படத்தின் சம்பவங்களோடும் தான் கடந்து வந்த, கடந்துகொண்டிருக்கிற வாழ்க்கையை பொருத்திப் பார்த்துக் கொள்வார்கள் என்பதும் தன்னம்பிக்கை பெறுவார்கள் என்பதும் ‘அயலி’யின் வெற்றி! அதற்காகவே பார்க்கலாம்.
எட்டு எபிசோடுகள் கொண்ட இந்த தொடர் ZEE5 ஓடிடி தளத்தில் ஜனவரி 26; 2023 அன்று வெளியாகியிருக்கிறது.
SpiralNews.in Rating 3.5 / 5