‘பகாசூரன்’ சினிமா விமர்சனம்

பணக்கார வர்க்கத்தின் பாலியல் பசிக்கு பலியான தன் மகளுக்கு நீதி கிடைக்கப் போராடும் தந்தையின் கதையாக ‘பகாசூரன்.’

செல்வராகவனின் மகள் சிலரால் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகிறாள். அதேபோல் நட்டி நட்ராஜின் அண்ணன் மகளும் பாதிக்கப்படுகிறாள்.

செல்வராகவன் மனதின் வழிநடத்தல்படி குற்றவாளிகளை தேடி கண்டுபிடிக்கிறார். நட்டி மூளை சொல்லும் வழியில் சென்று குற்றவாளிகளை சுற்றி வளைக்கிறார். அதன்பின் சம்பந்தப்பட்டவர்கள் யாரால், எப்படி தண்டிக்கப்படுகிறார்கள் என்பதே பரபரப்பான கதையோட்டம்…

குற்றவாளிகளை ( கருடபுராணம் சொல்லும்படி குற்றங்களின் தன்மைக்கேற்ப தண்டிக்கிற ‘அந்நியன்’ அம்பி போல்) மகாபாரத பீமன் பாணியில் தண்டிக்கும் காட்சிகள் மென் மனதுக்காரர்களை உயிர் நடுங்கச் செய்யும்!

சற்றே சாய்ந்த தலை, அதில் மெல்லிய நடுக்கம் என கவனிக்கத்தக்க உடல்மொழியுடன் செல்வராகவன். பாசப்பிணைப்பு, பழிவாங்க துடிப்பு, கூத்துக்கலை மேடையில் பீமன் வேடமிட்டு ஆடல் பாடல் என செல்வராகவனின் நடிப்பில் நல்ல உயிரோட்டம். சிவபெருமானை போற்றும் பாபநாசம் சிவனின் பாடலுக்கான காட்சியில் உடல் அதிர்கிறார்; கவர்கிறார்!

முன்னாள் ராணுவ அதிகாரி, காவல்துறையின் குறிப்பிடத்தக்க வழக்குகளில் குற்றவாளிகளை நெருங்குவதற்கான தடயங்களை கண்டறிகிற சிறப்பு பிரதிநிதி, யூ டியூபர் என கனமான பாத்திரத்தில் நட்டி நட்ராஜ். தனது வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.

ராதாரவி, தேவதர்சினி, ராம்ஸ், பி.எல்.தேனப்பன், இயக்குநர் சரவணன் சுப்பையா, கூல் சுரேஷ், பேச்சாளரும் யூ டியூபருமான சசி லயா, யாசர் என மற்ற பாத்திரங்களை ஏற்றிருக்கிறவர்களின் நடிப்பு நிறைவு.

மன்சூர் அலிகான், ரிஷா ஆடிப்பாடும் கலக்கலான குத்தாட்டமும் உண்டு.

சாம் சி.எஸ்ஸின் இசை சில காட்சிகளில் தேவைக்கேற்ப மிரட்டுகிறது; சில காட்சிகளில் அளவுக்கு மீறிய ஆக்ரோஷப் பாய்ச்சல் நிகழ்த்துகிறது.

கதை நிகழ்விடம், சண்டைக் காட்சிகள், எடிட்டிங் அத்தனையும் நேர்த்தி!

தமிழ் சினிமாவில் பழி வாங்கும் கதைகளுக்கு, பணக்கார குற்றவாளிகளை தண்டிப்பதில் காவல்துறையும் நீதித்துறையும் காட்டும் அலட்சியப்போக்கை காட்டுகிற படங்களுக்குப் பஞ்சமில்லை.

பகாசூரன் அந்த வரிசையில் மற்றுமொரு படம்தான் என்றாலும், சிலர் பணம் குவிப்பதற்காக பல பெண்களின் வாழ்வைச் சீரழிக்கிற சமீபத்திய இணைய வழி விபச்சாரம் குறித்து எடுத்துக் காட்டி விழிப்புணர்வூட்ட முயற்சித்திருக்கிற சமூக அக்கறைக்காக இயக்குநர் மோகன் ஜி.யை பாராட்டலாம். படத்தில் நடக்கும் சம்பவங்களில் இருக்கிற நாட்டு நடப்பு, உண்மைத் தன்மை, காட்சிகளின் விறுவிறுப்புக்காக படத்தை பார்க்கலாம்!

‘அதெல்லாம் சரி, படத்தில் அரசியல், உள்குத்து ஏதுமில்லையா?’ என்பது உங்கள் கேள்வியென்றால் ‘அதெல்லாம் இல்லாமல் மோகன் ஜி.யின் படமா? நெவர்’ என்பது நமது பதில்!

SpiralNews.in Rating 3.5 / 5

75

Leave a Reply

Your email address will not be published.