ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் நாகேஷ் பற்றிய புத்தகங்களை வெளியிட்டார் நடிகர் சிவகுமார்!

தனது நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்பின் மூலம் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் நாகேஷ். தமிழ் சினிமா குறித்த தகவல் களஞ்சியமாகத் திகழ்ந்தவர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன்.

இவர்கள் இருவரது வாழ்க்கை அனுபவங்களைத் தொகுத்து பத்திரிகையாளர் எஸ். சந்திர மௌலி புத்தகங்களாக எழுதி இருக்கிறார்.

‘நான் நாகேஷ்’, ‘திரைக் கடலோடி’ என்ற தலைப்பிலான இரு புத்தகங்களையும் பிரபல நடிகர் சிவகுமார் வெளியிட்டார்.

டயமண்ட் பாபு, நடிகர் சிவகுமார், புத்தக ஆசிரியர் எஸ். சந்திர மௌலி, பதிப்பாளர் ராஜேஷ் தேவதாஸ்

புத்தகத்தின் முதல் பிரதிகளை ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் மகனும், பிரபல திரைப்பட மக்கள் தொடர்பு அலுவலருமான டயமண்ட் பாபு பெற்றுக் கொண்டார்.

புத்தகங்களை வெளியிட்ட நடிகர் சிவகுமார், “நாகேஷ் ஒரு அபாரமான நடிகர். என் நெருங்கிய நண்பர். ஃபிலிம்நியூஸ் ஆனந்தன், தமிழ்த் திரையுலகின் நடமாடும் என்சைக்கிளோபீடியாவாக திகழ்ந்தவர். தமிழ் சினிமா உலகத்துக்கு இருவரது பங்களிப்பும் மகத்தானது. சுவாரஸ்யம் மிகுந்த அவர்கள் வாழ்க்கை அனுபவங்கள் ஆவணப்படுத்தபட வேண்டியவை. இரு புத்தகங்களையும் ஒரு சேர வெளியிடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

முதல் பிரதிகளைப் பெற்றுக் கொண்ட டயமண்ட் பாபு, “எங்கள் தந்தையார் பத்திரிகை உலகோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். பத்திரிகைகளுக்கு, சினிமா உலகம் குறித்த எந்த தகவலோ, புகைப்படமோ தேவையானாலும், அவரைத்தான் தொடர்பு கொள்வார்கள். அவரது வாழ்க்கை அனுபவங்கள் புத்தகமாக வெளிவருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. இதனை சாத்தியமாக்கி இருக்கும் பத்திரிகையாளர் சந்திர மௌலிக்கும், பதிப்பாளர் ராஜேஷ் தேவதாசுக்கும், புத்தகத்தை வெளியிட்ட நடிகர் சிவகுமாருக்கும் எனது நன்றி” என்றார்.

2004-ம் ஆண்டில் நாகேஷ் குறித்த புத்தகத்தின் முதல் பதிப்பு வெளியானபோது அந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தவர் நடிகர் சிவகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published.

WhatsApp