‘கட்டா குஸ்தி’ சினிமா விமர்சனம்

மண வாழ்க்கையில் நினைச்சது ஓண்ணு நடந்தது ஓண்ணு என்றாகிவிட்டால் குடும்பத்தில் புயல் வீசத்தானே செய்யும்?! அந்த புயலை புன்னகை விருந்தாக்கி தியேட்டர்களை கலகலப்பாக்கியிருக்கிறது ‘கட்டா குஸ்தி.’
தனக்கான மனைவியை அழகானவள், அதிகம் படிக்காதவள், கூந்தல் நீளமானவள் என்ற இலக்கணத்தோடு எதிர்பார்க்கிறார் விஷ்ணு விஷால்.
ஆண்கள் போல் கிராப் வெட்டிக் கொண்டவர், ஆளுமையாக களமிறங்கி குஸ்தி போட்டிகளில் பதக்கங்கள் குவிப்பவர் என்றிருக்கிற ஐஸ்வர்யா லெஷ்மியை, அடக்க ஒடுக்கமான பெண் என்று நம்பவைத்து, விஷ்ணு விஷாலுக்கு மிஸஸ் ஆக்குகிறார்கள்.
தலையில் விக் வைத்த பெண்ணை தன் தலையில் கட்டிய வில்லங்கம் விஷ்ணு விஷாலுக்கு தெரியும்போது தம்பதிக்குள் விரிசல்… கல்யாண வாழ்க்கையில் கலவரம்…
இந்த சீரியஸான கதையில் சிரிப்பு மசாலாவை சரியானபடி சேர்த்ததில் வெற்றிப்பட இயக்குநர் வரிசையில் இடம்பிடித்திருக்கிறார் செல்லா அய்யாவு.
‘இது ஹீரோயினுக்கான கதை’ என்பதை உணர்ந்து அதற்கேற்ப அளவாக நடித்திருப்பதற்காகவே விஷ்ணு விஷாலை கொண்டாடலாம். அப்பாவி என நினைத்த மனைவி திடீரென ரவுடிகளை ரவுண்டு கட்டி வெளுக்கும்போது மிரள்வது, ஒரேநாளில் ஊரே மதிக்கிற அளவுக்கு ஃபேமஸாகிவிட்ட மனைவி போடும் பழைய சோற்றை பம்மிக்கொண்டு சாப்பிடுவது என விஷ்ணு விஷாலின் நடிப்பு முழுக்க ரசிக்க வைக்கும் ரகளை!
களையான முகம், குஸ்தி வீராங்கனைக்கான கட்டுமஸ்தான தேகம் என அசத்துகிறார் ஹீரோயின் ஐஸ்வர்யா லெஷ்மி. அவருக்கான சண்டைக் காட்சி அதிரடி சரவெடி. சென்டிமென்ட்டிலும் மேடத்திடமிருந்து பெர்ஃபெக்ட் பெர்ஃபாமென்ஸ்!
கருணாஸ், முனீஸ்காந்த், காளி வெங்கட், ஹரீஸ் பேரடி எவர் நடிப்பிலும் குறையில்லை! கருணாஸின் மனைவியாக வருகிற கதாபாத்திரத்தை உற்றுக் கவனித்தால் கனம், ரணம் உணரலாம்!
பின்னணி இசை, பாடல்கள், ஒளிப்பதிவு நேர்த்தி!
கட்டா குஸ்தி – நம்பிப்போகலாம் குடும்பத்தோடு; சிரித்து ரசிக்கலாம் குதுகலத்தோடு!
