‘இரவின் நிழல்’ சினிமா விமர்சனம்

உலகிலேயே சிங்கிள் ஷாட்டில் Non லீனியர் முறையில் கதைசொல்லி எடுக்கப்பட்ட முதல் படம் என்ற பெருமையை எய்துகிறது ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இரவின் நிழல்!
தமிழ்சினிமாவில் இருந்து ஓர் வித்தியாசக்கொடியை ஏந்தி உலக சினிமா அரங்கில் பறக்க விட்டிருக்கும் பார்த்திபனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்
இந்தப்படத்தை சிங்கிள் ஷாட்டில் எடுக்க எத்தனையோ முறை முயற்சித்து தோல்விற்று..மீண்டும் மீண்டு………ம் முயற்சித்து வென்றதை மேக்கிங் வீடியோவாக வெளியிட்டுள்ளார் பார்த்திபன். படம் பார்ப்பதற்கு முன்பாக அந்த வீடியோக்கள் நம் மனதை கலங்கடிக்கிறது. ஒரு கலைவெறியனின் அசாத்திய உழைப்புக்கு நம் மனம் செய்யும் மரியாதை அது
50 வயதான பார்த்திபன் ஒரு துப்பாக்கியை ஏந்தியபடியே ஒருகொலை செய்ய கிளம்புகிறார். அந்தப்பயணத்தின் வழியே தன் வாழ்க்கைக் கதையைச் சொல்கிறார். முன்னும் பின்னுமாக அக்கதை நகர்கிறது சிங்கிள் ஷாட்டில்! முடிவில் பார்த்திபன் யாரைக்கொன்றார்? என்பதே கதை
இந்த இரவின் நிழலுக்கு தன் அபார உழைப்பால் ஒளி கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர். அவரது அபார உழைப்புக்கு ஹேட்ஸப். ஆர்ட் டைரக்டர் எடுத்துள்ள சிரத்தை படமெங்கும் பரந்து தெரிகிறது. பின்னணி இசையும் கதையை நகர்த்தும் பாடல்களும் படத்தின் ஜீவனை காத்து நிற்கிறது
மிகவும் முக்கியமாக ஈர்த்திருக்க வேண்டிய கதையும், கதை சொல்லலும் நமக்குள் எவ்வித பதட்டத்தையும் ஏற்படுத்தாதது பெரும் ஏமாற்றம். பார்த்திபனுக்குள் ஏற்படும் குற்றவுணர்ச்சி, அவர் படும் கஷ்டங்கள், அவர் அடையும் வெற்றி எதுவுமே நமக்குள் முழுமையாக கனெக்ட் ஆக மறுக்கிறது. ஒருமுறைக்கு 24 முறை ரீ டேக் போய் சிங்கிள் ஷாட்டை சாதித்த பார்த்திபன் ரைட்டிங்கிலும் பல ரீடேக் போயிருக்கலாமோ என்று தோன்றியது. பார்த்திபன் தனது வழக்கமான பெண் வெறுப்பை இப்படத்திலும் காட்டியுள்ளார். ஆண்களுக்கு துரோகமிழைக்கும் பெண் கேரக்டர்ஸ் சில படத்தில் கட்டாயப்படுத்தி காட்டப்பட்டுள்ளது. கூடுதலாக ஐயர்வாள் கமென்ட்டும் படத்தில் உண்டு. வசனகர்த்தாவாக பார்த்திபன் அசத்தல் தான். ஆங்காங்கே வெடிக்கும் அவரது பன்ச்கள் வழமை போல் அருமை
இவ்வளவு சிரத்தைக் கொண்டு சிறுத்தைப் போல உலக அரங்கில் பாய்ந்து தமிழ்சினிமாவுக்கு பெருமைத் தேடித் தந்திருக்கும் பார்த்திபனின் உழைப்பு நிச்சயம் கொண்டாடக்கூடியது. இந்த படைப்பும் கொண்டாடக்கூடியதாக மாறியிருந்தால் நமக்கு அதைவிட சந்தோசம் வேறென்ன? ஆனாலும் இந்தப்படத்தை தியேட்டரில் சென்று காணவேண்டியது நமது தலையாய கடமை…
3/5
-மு.ஜெகன் கவிராஜ், thangamtv.com