சாதிக் கட்சிகள்தான் தீவிரவாதத்தை வளர்க்கின்றன! -‘கட்சிக்காரன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஐயப்பன் ஆவேசம்

அரசியல் தலைவர்களின் சுயரூபத்தை வெளிச்சம்போட்டுக் காட்டுவிதத்தில் உருவாகியிருக்கிற படம் ‘கட்சிக்காரன்.’
பிஎஸ்கே புரொடக்ஷன்ஸ் – ப்ளூ ஹில் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா 13.12. 2022 அன்று சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

விழாவில்  சென்னை செங்கல்பட்டு திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தலைவரும் படத் தயாரிப்பாளருமான  கே. ராஜன் பாடல்களை வெளியிட இயக்குநர் பேரரசு பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில், படத்தின் கதை நாயகன் விஜித் சரவணன் பேசும்போது, “இந்த படத்தின் இயக்குநர் ஐயப்பன் ‘டோனி கபடிக் குழு ‘என்ற படம் எடுத்தார். அதில் எனக்கு வில்லன் வாய்ப்பு கொடுத்தார். இதில் கதையின் நாயகனாக நல்லதொரு கதாபாத்திரம் கொடுத்துள்ளார்.இந்தப் படத்திற்கு எது தேவையோ அதைக் கேட்டு வாங்கினார். எது தேவை எது தேவையில்லை என்பதில் தெளிவாக இருந்தார். அண்ணன் அப்புக்குட்டி முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். தேசிய விருது பெற்ற அவருடன் நடித்தது எனக்குப் பெருமை. இந்தப் படத்திற்காக எட்டு கிலோ எடையைக் கூட்டியிருக்கிறேன். எண்ணம் போல் வாழ்க்கை என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. நான் 2000 சினிமா கம்பெனிகளுக்கு என்னுடைய போட்டோக்களை எடுத்துக் கொண்டு ஏறி இறங்கி இருக்கிறேன். எந்த கம்பெனியில் சென்று பார்த்தாலும் என்னுடைய போட்டோக்கள் இருக்கும். இப்போதுதான் எனக்கு நல்ல வாய்ப்பு வந்திருக்கிறது.சினிமா மீது எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது. நான் ஒரு கதை என்ன கேட்கிறதோ அப்படியே நடிப்பேன்.நான் ஒரு நடிகன் அவ்வளவுதான். பாசிட்டிவ் நெகடிவ் என்ற பேதமெல்லாம் எனக்குக் கிடையாது” என்றார்.

படத்தின் நாயகி ஸ்வேதா டாரதி பேசும்போது, “இந்தப் பட வாய்ப்பு வந்தபோது அரசியல் சார்ந்த கதை என்றதும் நடிப்பதற்குத் தயக்கமாக இருந்தது. பிறகு என் கதாபாத்திரத்தைக் கேட்டபோது பிடித்திருந்தது. ஒப்புக்கொண்டேன். நான் அரக்கோணத்தைச் சேர்ந்தவள் . சினிமாவில் நடிப்பதற்காக என்னுடைய குடும்பமே சென்னை வந்தது. அந்த அளவுக்கு எனது பெற்றோர்கள் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். இந்த படம் எனக்கு நல்லதொருவாய்ப்பு. வெற்றிப் படமாக அமையும் என்று நம்புகிறேன்” என்றார்.

இயக்குநர் ஐயப்பன் பேசும்போது, “தொண்டனுக்கும் தலைவனுக்கும் நடக்கும் ஆடு புலி ஆட்டம் தான் படத்தின் கதை. தவறு செய்யும் தலைவனைத் தட்டிக் கேட்கும் ஒரு தொண்டனின் கதை. இன்றைய அரசியலில் பல விஷயங்கள் ஒழிக்கப்பட வேண்டும். அரசியலைச் சீரழித்துக் கொண்டிருக்கும் சாதிக் கட்சிகள் ஒழிய வேண்டும். சாதிக் கட்சிகள் தான் தீவிரவாதத்தை வளர்க்கின்றன. சாதிக் கட்சிகளை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும். அரசியல் கட்சிகள் கூட்டணி வைப்பதைத் தடை செய்ய வேண்டும். அதுதான் ஊழலுக்கு வழி வகுக்கிறது.காமராஜர், கக்கன் போன்ற அரசியல் தலைவர்கள்   அரசியலுக்கு வர வேண்டும். அவர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும்” என்றார்.

நடிகர் அப்பு குட்டி பேசும்போது, “நான் கெஸ்ட் ரோலில் இப்படத்தில் வருகிறேன். ஆனாலும் எனக்குத் திருப்தியான வாய்ப்பு இது “என்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களோடு இயக்குநர்கள் எத்தன் சுரேஷ், கேந்திரன் முனியசாமி, மதுராஜ், தொழிலதிபர் தூத்துக்குடி பால்ராஜ்,படத்தின் இணைத் தயாரிப்பாளர் மலர்க்கொடி முருகன், இசையமைப்பாளர்கள் ரோஷன் ஜோசப்,மகேந்திரன், பாடல் எழுதிய நா. ராசா மற்றும் படக்குழுவினர் பேசினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.

WhatsApp