சினிமாத்துறை சிறந்து விளங்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது! –‘கட்டில்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தமிழக அமைச்சர் பேச்சு

விரைவில் நான்கு மொழிகளில் திரைக்கு வரவுள்ள ‘கட்டில்‘ படத்தில் ‘கோயிலிலே குடியிருந்தோம்’ என்ற பாடலை சித் ஸ்ரீராம் நான்கு மொழிகளில் பாடியிருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள அந்த ஒரு பாடலின் (Single Track) வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 3-ம் தேதி சென்னையில் நடந்தது.
படத்தை இயக்கி, தயாரித்து கதைநாயகனாக நடித்துள்ள இ.வி. கணேஷ்பாபு, கதை, திரைக்கதை, வசனம் எழுதிய பிரபல எடிட்டர் லெனின், கதாநாயகி சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட படக் குழுவினருடன் சிறப்பு விருந்தினராக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சென்னை விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பிரபாகர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் இ.வி. கணேஷ்பாபு பேசும்போது, ”நானும் பத்திரிகையாளனாக இருந்து வந்தவன்தான். நான் இங்கு இன்று இந்த மேடையில் இருக்க முக்கிய காரணம் எடிட்டர் லெனின் அவர்கள் தான். அவரது ஊக்கத்தில்தான் இந்த திரைப்படம் உருவானது. செய்தித்துறை அமைச்சர் அவர்கள் இந்த நிகழ்விற்கு வந்து வாழ்த்துவது மிக மகிழ்ச்சி. ஶ்ரீகாந்த் தேவா இப்படத்தில் அருமையான இசையைத் தந்துள்ளார்.
சித் ஶ்ரீராம் மிக அரிதாக தேர்ந்தெடுத்து பாடல்கள் பாடுகிறார். எங்கள் படத்தில் நான்கு மொழிகளில் அவர் பாடித் தந்தது மகிழ்ச்சி. நடிகை சிருஷ்டி டாங்கே கட்டிலில் தமிழ் பெண்ணாகவே மாறி விட்டார். இந்த படம் அவருக்கு முக்கியமான படமாக அமையும். இந்த கட்டில் நம் பாரம்பரியத்தை போற்றும் படமாக அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்” என்றார்.
அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசும்போது, ”மிகச்சிறப்பான படைப்பாக கட்டில் திரைப்படத்தை உருவாக்கியிருக்கும் இ.வி.கணேஷ்பாபு குழுவிற்கு எனது வாழ்த்துக்கள். வியாபார நோக்கம் இல்லாமல் சமூக சூழலைச் சுற்றி இக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எளிமையான வாழ்வை சொல்லும் எதார்த்தமான படமாக அமைந்திருப்பதால் மிகப்பெரிய வெற்றிபெறுமென நம்புகிறேன். இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
கலைஞர் அவர்கள் திரைத்துறை மீது அக்கறை கொண்டவராக இருந்தார். அதே போல் இன்று, நம் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களும் திரைத்துறை மீது மிகுந்த அக்கறையோடு உள்ளார். தமிழ்நாடு அரசு சினிமாத்துறை சிறந்து விளங்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. திரைத்துறையிலிருந்து பல கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் அரசு ஆராய்ந்து செய்து தருமென உறுதி கூறுகிறேன்” என்றார்.
இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த்தேவா பேசும்போது, ”என் இசையில் கிளாசிக்கல் மியூசிக் இல்லையே என வருத்தப்படுவதுண்டு. கட்டில் படம் மூலமாக அந்த வருத்தம் தீரும். இந்தப்படத்தில் வைரமுத்து அவர்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. படம் வெற்றிபெற வாழ்த்துகள்” என்றார்.
நடன இயக்குநரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘மெட்டி ஒலி’ சாந்தி பேசும்போது, அந்தக் காலத்தில் காதலுக்கு, குழந்தைக்கு எனத் தனித்தனியாக பாடல் இருக்கும். பாடல்கள் கதையோடு சேர்ந்து, கதையை சொல்வதாக இருக்கும். இப்போது பாடல்கள் கமர்ஷியலாக மாறிவிட்டது. இதை நினைத்து வருத்தப்பட்டிருக்கிறேன். நடன இயக்குநராக பல நேரங்களில் இது எனக்கு தோன்றியிருக்கிறது. இப்போது ஆடியன்ஸ் மாறியுள்ளார்கள். கதைக்காக படம் பார்க்கிறார்கள். இப்படத்தை நீங்கள் பாடலுக்காகவே படம் பார்ப்பீர்கள். பாடலே கதையை சொல்லும். படத்தை இ.வி.கணேஷ்பாபு சார் மிக அற்புதமாக உருவாக்கியுள்ளார்” என்றார்.
தொழில் நுட்பக்குழு:-
தயாரிப்பு: Maple Leafs Productions
கதை திரைக்கதை வசனம் எடிட்டிங்: பீ.லெனின்
பாடல்கள்: கவிப்பேரரசு வைரமுத்து
ஒளிப்பதிவு: வைட் ஆங்கிள் ரவிசங்கர்
இசை: ஶ்ரீகாந்த் தேவா
