‘காரி’ சினிமா விமர்சனம்

ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் ஒருதரப்பு மல்லுக்கட்டும் தருணத்தில், அதே ஜல்லிக்கட்டை மையப்படுத்தி தமிழர்களின் வீரத்தை தூக்கிப் பிடிக்கிறது ‘காரி’யின் விறுவிறுப்பான கதைக்களம்!

ரேஸில் குதிரையை செலுத்துகிற ஜாக்கி சசிகுமார். அந்த குதிரையை பிள்ளைபோல் பாசம் காட்டி வளர்ப்பவர் சசிகுமாரின் அப்பா ஆடுகளம் நரேன். சசிகுமாரின் நண்பன் செய்த சூழ்ச்சியால் ரேசில் குதிரை தோற்று, உயிரை விடுகிறது. குதிரையைப் பிரிந்த துக்கம் தாங்கமுடியாமல் சசிகுமாரின் அப்பாவும் போய்ச் சேர்கிறார்.

சில நாட்கள் கழிந்தநிலையில் சசிகுமார் தனது சொந்த கிராமத்துக்கு சென்று சேர்கிற சூழல் உருவாகிறது. அங்கு போன அவர் கிராமத்தை அழிக்க நினைக்கும் கார்ப்பரேட் நிறுவன முதலாளியோடு மோதுகிறார்; ஒரு தலைமுறை காலத்துக்கும் மேலாக மழையின்றி தரிசாய் கிடக்கும் பூமி செழிக்க சில திட்டங்களைத் தீட்டி அதை மக்களைக் கொண்டே நிறைவேற்றுகிறார். கிராமத்தின் இரண்டு ஊருக்கிடையில் இருக்கும் பகையை தீர்த்துவைக்கும் முயற்சியில் இறங்குகிறார்.

அத்தனையும் பரபரப்பாக நடக்க, ஊர் நலனுக்காக யாராலும் அடக்க இயலாத ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் சவாலை ஏற்க திரைக்கதை சூடுபிடிக்கிறது.

எதிர்பார்ப்பதுதான் நடக்கிறது என்றாலும் கிளைமாக்ஸ் மனதுக்கு நிறைவு! இயக்கம்: ஹேமந்த்

கிராமத்துக் கதைகளில் நடிப்பதென்றால் சசிகுமாருக்கு கொள்ளைப் பிரியம். அதிலும் காளை, ஜல்லிக்கட்டு, திருவிழாப் பஞ்சாயத்து என கதைக்களம் கனமாக அமைந்துவிட மனிதர் வெறியேறிய வேங்கையாய் சுழன்றடிக்கிறார். ஜல்லிக்கட்டில் அவர் களமிறங்கும் காட்சிகள் தீ பற்றியது போலிருக்கிறது!

கதாநாயகியாக பார்வதி அருண்; தமிழ் சினிமாவுக்கு மற்றுமொரு கேரளத்து வரவு. அவர் நல்ல தேர்வு என்பது காளை மீது காட்டும் பாசத்திலும் சசிகுமார் மீது பொழியும் நேசத்திலும் தெரிகிறது!

இனப் பெருக்கத்துக்காக வீரிய ரக காளைகளை தேடிப்பிடிப்பதும், அவற்றை வாய்க்கு ருசியாக சமைத்துச் சாப்பிடுவதுமாக ஜேடி சக்கரவர்த்தி. கார்ப்பரேட் வில்லன்கள் வழக்கமாக செய்கிற அத்தனை அநியாயங்களையும் செய்கிற அவருக்கு ஜோடியாக வருகிற சம்யுக்தாவும் சதிச் செயல்களில் சரிபாதியை ஏற்கிறார்.

கதைநாயகனின் அப்பாவாக ‘ஆடுகளம்’ நரேன், கதாநாயகியின் அப்பாவாக பாலாஜி சக்திவேல், ஊர்ப் பெரியவராக நாகிநீடு என படத்தில் வரும் அத்தனைப் பேரின் நடிப்பும் கதைக்கு வலு சேர்த்திருக்கிறது.

ஜல்லிக்கட்டில் காளைகள் களமிறங்கும்போது ஹை டெசிபலில் அதிரும் இமானின் பின்னணி இசை சிலிர்ப்பு!

பிரமாண்டமான ஜல்லிக்கட்டை தனது ஒளிப்பதிவால் தரம் உயர்த்தியிருக்கிறார் கணேஷ் சந்திரா.

கதையில் 18 விதமான காளைகள் அணிவகுத்தாலும் தனித்துத் தெரிகிறது ‘காரி’யாக சீற்றம் காட்டும் அந்த காளை!

கதையின் போக்கில் ஒருசில சலிப்பு தரும் காட்சிகள் கடந்துபோனாலும் தமிழர்களின் வாழ்வியலை, பாரம்பரியத்தை மண்மணத்தோடும், உயிர்ப்போடும் காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தில் ‘காரி’ தமிழர்களின் வீரத்துக்கு போட்ட உரம்!

SpiralNews ரேட்டிங் 4/5

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp