‘கட்சிக்காரன்’ சினிமா விமர்சனம்

தன் உழைப்புக்கு ஆப்பு வைத்த அரசியல் தலைவனை, அடிமட்டத் தொண்டன் அறிவுபூர்வமாக எதிர்க்கும் கதை.
தலைவன் வைத்த ஆப்பு எப்படிப்பட்டது என்பதும், தொண்டனின் எதிர்ப்பிலிருக்கிற படு வித்தியாசமான அணுகுமுறையுமே திரைக்கதை!
அந்த இளைஞன் தான் சார்ந்த கட்சிக்கு விசுவாசமான தொண்டன். கட்சியின் தலைவருக்காக உழைப்பை ஏராளமாகவும் பணத்தை தாராளமாகவும் செலவிடுகிறான். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தவிர்த்து அந்த பணத்தில் மக்களின் அடிப்படைத் தேவையை நிறைவேற்றி வாக்குகளை பெற வழிசெய்கிறான். தலைவர் தேர்தலில் ஜெயிக்கிறார்.
ஜெயித்தபின் தொண்டனுக்கு கவுன்சிலர் சீட் தருகிறார். தொண்டன் உற்சாகமாக தேர்தலைச் சந்திக்க தயாராகும்போது தலைவரால் துரோகத்தைச் சந்திக்கிறான்.
அந்த துரோகத்துக்கு அவன் தருகிற அதிரடியான பதிலடி ‘கட்சிக்காரன்’ படத்திலிருக்கிற புதுமை. இயக்கம் பி. ஐயப்பன்
கதை நாயகனாக விஜித் சரவணன். தலைவனுக்காக எதையும் செய்கிற அப்பாவித் தொண்டன் பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். தனக்கெதிராக நடந்த சதி தெரிந்தபின் தலைவனைச் சந்தித்து தெனாவட்டு காட்டுவது ஈர்க்கிறது!
தன் கணவன் அபிமானம் வைத்துள்ள தலைவனுக்காக தாலியைக் கழட்டிக் கொடுக்கும்போது கனிவு, அந்த தலைவனை எதிர்க்க கணவனுக்கு ஆலோசனை சொல்லும்போது துணிவு என தரமான நடிப்பைத் தந்திருக்கிறார் தமிழ்நாட்டுப் பெண் ஸ்வேதா டாரதி. டூயட் பாடலில் வெளிப்படும் வெட்கச் சிரிப்பும், மெல்லிய கவர்ச்சியும் அழகு!
சுயநல அரசியல்வாதியாக வருகிற சிவசேனாதிபதியின் நடிப்பு பரவாயில்லை ரகம்!
சிறிய வேடமென்றாலும் நிறைவாகச் செய்திருக்கிறார் அப்புக்குட்டி. இன்று இந்த கட்சிக்கு, நாளை இன்னொரு கட்சிக்கு என தாவித்தாவி கடமையாற்றுகிற ஏ.ஆர். தெனாலியின் நடிப்பு கொஞ்சமே கொஞ்சம் சிரிப்பு மூட்டுகிறது!
நடிகர் நாசரின் தம்பி ஜவகர், விஜய் கெளதம், சி.என்.பிரபாகரன்,வின்சென்ட்ராய், குமர வடிவேலு, மாயி சுந்தர், ரமேஷ் பாண்டியன், பரந்தாமன், சாய்லட்சுமி, நந்தகுமார், சக்திவேல் முருகன் என பலரது நடிப்புப் பங்களிப்பும் படத்தில் உண்டு.
ரோஷன் ஜோசப் இசையில் ‘செங்குறிச்சி சின்னப் பொண்ணு’ பாடல் மனதுக்கு இதம்!
அரசியல் தலைவர்களின் முன்னேற்றத்துக்காக தொண்டர்கள் செலவு செய்கிற பணத்தை திரும்பக் கேட்கும் கதைக்களம் படத்தின் பலம். நாடகத்தனமான காட்சிகள் பலவீனம்.
குறைகளை பொருட்படுத்தாமல் பார்த்தால் ‘கட்சிக்காரன்’ உண்மையான தொண்டர்களின் ‘பாசக்காரன்.’ அநியாய அரசியல்வாதிகளுக்கு எதிரி!
கருத்துக்களைப் பகிர: spiralnewss@gmail.com
