பிவிஆர் நிறுவனம் சென்னையில் உருவாக்கிய இந்தியாவின் முதல் விமானநிலைய திரையரங்கம்! நடிகர்கள் சதீஷ், ஆனந்த்ராஜ், கூல் சுரேஷ் திறந்து வைத்து வாழ்த்து!

அதிநவீன வசதிகளுடன் நாடு முழுதும் திரையரங்குகளை அமைத்து நிர்வகிக்கிற பிவிஆர் (PVR) நிறுவனம், இந்தியாவிலேயே முதன்முறையாக விமானநிலைய வளாகத்துக்குள் பிரமாண்ட திரையரங்கத்தை துவங்கிய பெருமையை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மீனம்பாக்கம் விமான நிலைய வளாகத்தில் இந்த திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

ஐந்து திரைகள் கொண்ட இந்த திரையரங்க வளாகத்தை பிப்ரவரி 1; 2023 அன்று காலை நடிகர்கள் சதீஷ், ஆனந்த்ராஜ், கூல் சுரேஷ், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு திறந்து வைத்தனர்.

புதிய தியேட்டரின் அதிநவீன புதிய வசதிகளை (2K RGB+ Laser projectors, REAL D 3D digital stereoscopic projection, Dolby Atmos high definition immersive audio) சிறப்பு விருந்தினர்களும், ஊடகத்துறையினரும், ரசிகர்களும் அனுபவித்து உணரும் வகையில் சில திரைப்படங்களின் டிரெய்லகள் காண்பிக்கப்பட்டன.

3 டி அனுபவத்தை உணர்வதற்காகவும் சில டிரெய்லர்கள் திரையிடப்பட்டன. 3 டி திரைப்பட காட்சிகளை பார்ப்பதற்காக வழங்கப்பட்டவை பார்வைத்திறன் பிரச்சனைக்காக வழக்கமாக அணியக்கூடிய மூக்குக் கண்ணாடியின் மேல் அணியும் விதத்திலான தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட 3 டி கண்ணாடிகள் என்பது குறிப்பிடத்தக்கது!

சிறுவயதில் 40 பைசா கொடுத்து படம் பார்த்த அனுபவம், தான் ஹீரோவாக நடித்தபோது அந்த படங்கள் தியேட்டர்களில் வெளியானபோது இருந்த எதிர்பார்ப்பு உள்ளிட்ட பல விஷயங்களை நடிகர் ஆனந்த்ராஜ் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர் இயக்கும் படத்தில் தான் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கவிருப்பதை குறிப்பிட்டு, அந்த படம் ஏர்போர்ட் வளாகத்துக்குள் அமைந்திருக்கும் தான் திறந்து வைத்த தியேட்டரில் வெளியாகவேண்டும் என தன் விருப்பத்தை தெரிவித்தார்.

நடிகர் சதீஷ், தனது சிறுவயதில் 10 ரூபாய் டிக்கெட்டுக்காக இரண்டு, மூன்று நாட்கள் காத்திருந்து படம் பார்த்த அனுபவங்களை குறிப்பிட்டு, இந்தியாவிலேயே முதன் முறையாக ஏர்போர்ட் வளாகத்தில் அமைந்துள்ள தியேட்டரை திறந்து வைக்கிற அளவுக்கு தான் வளர்ந்துள்ளதற்கு காரணமான ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

பிரமாண்டமாக நடந்த இந்த திறப்பு விழாவில் பரதம், கரகாட்டம் என பாரம்பரிய கலைநிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது!

24

Leave a Reply

Your email address will not be published.