‘லைசென்ஸ்’ படத்தில் முதன்மை கதாபாத்திரமேற்று நடிகையாகிறார் பாடகி ராஜலட்சுமி செந்தில்!
‘சார்லி சாப்ளின்’ படத்தில் ‘என்ன மச்சான்’, ‘புஷ்பா’ படத்தில் ‘வாயா சாமி’ பாடல்களைப் பாடி பிரபலமானவர் மக்களிசைப் பாடகி ராஜலட்சுமி செந்தில்!
அவர், ‘லைசென்ஸ்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ராதாரவி நடிக்க முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுக நடிகர் விஜய் பாரத் நடிக்கிறார். மதுரை ரிஷி, குழந்தை நட்சத்திரம் அதிதி பாலமுருகன், கிருஷ்ணா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் அறிமுகவிழா 9.11.2022 அன்று சென்னையில் நடந்தது.
தந்தை மகள் பாசப் பின்னணியுடன் பெண்களின் பாதுகாப்பு பற்றி விவாதிக்கும் பரபரப்பான கதையாக இருக்கும் என்கிறார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் கணபதி பாலமுருகன். இவர் கவுண்டமணி நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ என்ற படத்தை இயக்கியவர்!
பெண்களின் மேன்மையை எடுத்துரைக்கும் இப்படத்தில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இருக்குமாம்.
நார்மல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக இளஞ்செழியன் தனது நண்பர்களுடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.