பிஃஎப். ஈஎஸ்ஐ போன்றவை சினிமா கலைஞர்களுக்கும் கிடைக்க வேண்டும்! -‘சஷ்தி’ குறும்பட விழாவில் இயக்குநர் ஜூட் பீட்டர் டேமியான் பேச்சு

குறும்படங்கள் சினிமாவில் நுழைவதற்கான விசிட்டிங் கார்டு என்று சொல்வார்கள். அந்தவகையில் 30 வருடங்கள் சார்ட்டட் அக்கவுண்டன்ட் பணி அனுபவம் கொண்டவரான ஜூட் பீட்டர் டேமியான், டைரக்சன் மீதுள்ள ஆர்வத்தால் சினிமாவில் நுழையும் முதல்படியாக சஷ்தி என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார்.

Cathy & Raphy பிலிம்ஸ் சார்பில் தயாராகியுள்ள இந்த குறும்படம். 30 நிமிடங்கள் ஓடும் விதமாக உருவாகியுள்ளது. செம்மலர் அன்னம், லிசி ஆண்டனி, டாக்டர் SK காயத்ரி, ஹாரிஸ், மாஸ்டர் ஜெப்ரி ஜேம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த ‘சஷ்தி’ குறும்படம் கிட்டத்தட்ட 35 சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் 77 விருதுகளை வென்றுள்ளது.

இந்த குறும்பட திரையிடலுடன் கூடிய பத்திரிக்கையாளர் சந்திப்பும் விருது பெற்ற கலைஞர்களை கவுரவிக்கும் நிகழ்வும் நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திரைக்கதை மன்னன் இயக்குனர் கே.பாக்யராஜ் கலந்து கொண்டார். இந்த குறும்படத்தில் பணியாற்றி பல்வேறு பிரிவுகளில் சர்வதேச விருதுகளை வென்ற கலைஞர்களுக்கு அந்த விருதுகளை இயக்குனர் கே.பாக்யராஜ் வழங்கி கௌரவித்தார்.

இதைத்தொடர்ந்து இயக்குனர் ஜூட் பீட்டர் டேமியான் பேசும்போது,

“இந்த குறும்படத்திற்கு ஏதோ ஒன்றிரண்டு விருதுகள் மட்டும் தான் நான் எதிர்பார்த்தேன்.. ஆனால் ஆச்சரியமாக இவ்வளவு விருதுகள் இதற்கு கிடைத்துள்ளன. இந்த குறும்படம் வெறும் 30 நிமிடத்திற்குள் ஓடும் விதமாக இருந்தாலும், இந்த குறும்படத்தை ஒரு வாரத்திற்குள்ளேயே படமாக்கி முடித்து விட்டாலும் இதற்கான கதை மற்றும் திரைக்கதையை உருவாக்க கிட்டத்தட்ட ஒரு வருட காலத்திற்கு மேல் ஆனது.

படப்பிடிப்பின்போதே லைவ் ரெக்கார்டிங் முறையில் வசனங்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்டன. நல்ல நடிகர்கள் மற்றும் திறமையான தொழில்நுட்ப கலைஞர்களால் தான் இத்தனை விருதுகள் எங்களுக்கு சாத்தியமானது. திரு.சிவகுமார் மோகனன், ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் ஆசிரியர் & படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் வழிகாட்டுதல் பயனுள்ளதாக இருந்தது.

அடிப்படையில் நான் ஒரு சார்ட்டட் அக்கவுன்டன்ட் என்றாலும் சினிமா மீதான ஆர்வத்தால் இந்த குறும்படத்தை இயக்க முடிவு செய்தேன். அதற்காக எல்வி பிரசாத் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து டைரக்ஷன் கோர்ஸ் கற்றுக்கொண்டு அதன்பின் இந்த குறும்படத்தை இயக்கினேன்.

ஆனால் இந்த குறும்படத்திற்காக பணியாற்றியபோது ஒரு விஷயத்தை என்னால் உணர முடிந்தது.. சினிமாவில் பணியாற்றும் கலைஞர்கள் கடுமையாக உழைக்கின்றனர்.. ஆனால் அவர்களுக்கான சமூக பாதுகாப்பு இல்லை.. அவர்களுக்கான நிச்சயமான எதிர்காலம் இல்லை. அரசு சார்ந்த மற்றும் அரசு சாராத என எந்த துறையினருக்கும் பிஎப். ஈஎஸ்ஐ போன்றவை கிடைக்கப்பெற வேண்டும் என சட்டம் சொல்கிறது.. அவற்றை இந்த சினிமா கலைஞர்களுக்கும் கிடைக்க வழிவகை செய்யவேண்டும். பாக்யராஜ் போன்றவர்கள் இருக்கும் இந்த மேடையில் அதை ஒரு கோரிக்கையாக முன் வைக்கிறேன்” என்று கூறினார்.

இயக்குனர் கே.பாக்யராஜ் பேசும்போது,

“75 விருதுகள் பெற்ற ஒரு குறும்படத்திற்கு இவ்வளவு எளிமையாக ஒரு விழா நடப்பது ஆச்சரியமான ஒன்றுதான். சினிமாவிற்காக தான் பார்த்து வந்த வேலையை ஒதுக்கிவைத்துவிட்டு சினிமாவின் மீதான ஆர்வத்தால் இயக்குனர் ஜூட் பீட்டர் டேமியான் இதில் நுழைந்துள்ளார். சினிமா ஆசை வந்துவிட்டால் அப்படித்தான். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட இப்படி வங்கியில் பணிபுரிந்து விட்டு சினிமா மீதான ஆர்வத்தால் அதிலிருந்து வெளியேறி வந்து இன்று மிகப்பெரிய அளவில் சாதித்துள்ளார்.

வெறுமனே படம் இயக்க ஆசைப்பட்டால் மட்டும் போதாது என அதற்காக ஒரு கோர்ஸ் படிச்சிட்டு வந்து ஜூடு பீட்டர் டேமியன் அதை செய்திருக்கிறார் என்பது இன்னும் ஆச்சரியப்படுத்துகிறது.

நான் படம் இயக்கிய காலகட்டங்களில் படம் ரிலீஸாச்சா, மக்கள் கைதட்டினார்களா அது போதும் என இருந்து விட்டேன். ஆனால் இந்தப்படத்தின் இயக்குனர் எவ்வளவு தெளிவாக இருந்திருந்தால் இத்தனை திரைப்பட விழாக்களுக்கு விண்ணப்பித்து இத்தனை விருதுகளை கைப்பற்றி இருப்பார்? தயவுசெய்து எனக்கும் இந்த திரைப்படங்களை அவார்டுக்கு அனுப்புவது பற்றி கொஞ்சம் சொல்லிக் கொடுங்கள்.. காலம்போன கடைசியில் என்றாலும் இன்னும்கூட எனக்கும் வாய்ப்பு இருக்கிறது.. தேவைப்படும்போது அதை பயன்படுத்திக் கொள்வேன்.

இந்த குறும்படத்தை பார்த்தபோது கடைசியாக அந்த சிறுவன் தனது தாய் பற்றி கேட்கும் கேள்வி மட்டும் சற்று நெருடலாக இருந்தது. தாயின் அன்பை சந்தேகப்பட்டாலும் அது கொஞ்சம் வேறு மாதிரி இருந்திருக்கலாமோ என்கிற எண்ணமும் தோன்றியது. இயக்குனர் ஜூடு பீட்டர் டேமியன் சினிமாவிலும் கால் பதித்து மிகப்பெரிய வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன்” என்று கூறினார்

சஷ்தி குறும்படம் பற்றி..

தாய்க்கும் மகனுக்குமான உறவை மையப்படுத்தி உருவாகியுள்ளது இந்த ‘சஷ்தி; குறும்படம்.. தான் வளர்ப்பு மகன் என்பதை அறியாமலேயே வளரும் சிறுவன் ஒருவன், சாதாரண பெண்ணாக இருக்கும் ஒருவரை எப்படி கடவுள் என நினைக்கும் அளவுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரை பற்றிய அவனுடைய அபிப்ராயங்கள் எப்படி மாறுகின்றன என்பதை அழகாக சொல்கிறது இந்த குறும்படம்..

இந்த குறும்படத்தை https://apple.co/3PpIXnJ என்கிற லிங்க் மூலம் iTunesலும் https://bit.ly/3JXXoOD என்கிற லிங்க் மூலம் Google Playயிலும் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp