‘181’ சினிமா விமர்சனம்

தமிழில் இன்னொரு பேய்ப்படமாக ‘181.’
தான் இயக்கவிருக்கும் திரைப்படத்துக்கான கதையை உருவாக்க காட்டுப்பகுதியிலுள்ள பண்ணை வீட்டுக்கு செல்கிறார் அந்த இளவயது நபர். திகில் கதையெழுத சென்றவர் நினைத்தபடி கதையெழுத முடியாமல் அங்கிருக்கும் அமானுஷ்ய சக்தியால் சிலபல திகில் சம்பவங்களை சந்திக்கிறார். அதனால், உடனிருக்கும் இயக்குநரின் மனைவியும் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்.
இந்த நிலையில், கதையை அமானுஷ்ய சக்தியே எழுத, அந்த சக்தியின் பின்னணி என்ன என்பதை அறிகிறார்கள்; அதிர்கிறார்கள். அந்த அதிர்ச்சிப் பின்னணி என்ன என்பது காட்சிகளாக விரியும்போது படம் பார்ப்பவர்களும் அதிர்ச்சியில் உறையும்படியிருக்கிறது.
வழக்கமான பேய்க் கதையை பெண்களுக்கு விழிப்புணர்வூட்டும் விதத்தில் விறுவிறுப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் இசாக்.
கதாநாயகனாக ஜெமினி. இயக்குநருக்கான கதாபாத்திரம் அறிந்து இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
கதாநாயகியாக வரும் ரீனா கிருஷ்ணனின் அழகு ஈர்க்கிறது. நிறைவுக் காட்சியில் நடிப்பில் ஆவேசமும் காட்டி உள்ளார்.
அமானுஷ்ய சக்தியின் பின்னணி தெரிந்து இருவரும் எடுக்கும் முடிவு கதைக்கு பலம் சேர்க்கிறது.
வில்லனாக விஜய் சந்துருவும் அவருடைய நண்பர்களாக வருபவர்களும் கொடுத்த கதாபாத்திரத்தை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள்.
அப்பாவிப் பெண்ணாக வரும் காவ்யாவின் நடிப்பு பரிதாபத்தை அள்ளுகிறது.
திகில் கதைக்கு தேவையான பரபரப்பான இசையை கொடுத்திருக்கிறார் ர் ஷமீல். ஒளிப்பதிவாளர் பிரசாத்தின் கேமரா கோணங்கள் காட்டு பங்களா பேய் திகிலுக்கு உதவுகிறது.
கிளைமாக்ஸ் பாலியல் பலாத்கார காட்சிகள் பயங்கரம். நீளத்தை குறைத்திருக்கலாம்.