இந்த படத்தின் தயாரிப்பாளரை 15 பெண்கள் கட்டிப் பிடிப்பார்கள்! -‘அருவாசண்ட’ பட விழாவில் தயாரிப்பாளர் கே. ராஜன் பேச்சு

இளையராஜா இசையில் ‘நினைவெல்லாம் நீயடா’, ‘சிலந்தி’, ரணதந்த்ரா (கன்னடம்) உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிராஜன் இயக்கியிருக்கும் படம் ‘அருவா சண்ட.’
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம் வரும் டிசம்பர் 30-ம் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்த படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர் ஆதிராஜன் பாடல்களை எழுத, தரண்குமார் இசையமைத்துள்ளார்.
படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர்கள் செளந்தர்ராஜா, அபிசரவணன், தயாரிப்பாளர் ரிஷி ராஜ், இசையமைப்பாளர் தரண்குமார், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, முரளி இராமநாராயணன், கேயார், கே.ராஜன், அசோக் சாம்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் தயாரிப்பாளர் வி.ராஜா, “தயாரிப்பாளர் அண்ணன் கே.ராஜன் சினிமா விழாக்களில் பேசும்போது ‘படத்தின் ஹீரோயின் ஏன் விழாவில் கலந்துகொள்ளவில்லை?’ என்று கேட்பார். ஹீரோயின்கள் மட்டுமல்ல, அம்மா கேரக்டர்களில் நடிப்பவர்களும் கலந்துகொள்வதில்லை. இந்தப்படத்தில் அம்மா கேரக்டரில் நடித்திருக்கும் சரண்யா பொண்வண்ணன் மேடத்திடம் காலில் விழாத குறையாக விழாவுக்கு அழைத்தும் மறுத்துவிட்டார்.
இதே பெரிய படம், பெரிய தயாரிப்பாளர் என்றால் அந்த நிகழ்ச்சிக்கு போயிருப்பார். சிறிய பட தயாரிப்பாளர்களை கேவலமாக நினைக்கிறார்கள். இந்தப் படத்திற்காக நிறை கஷ்டப்பட்டிருக்கிறேன்; காயப்பட்டிருக்கிறேன். கண்ணீரில் ரத்தம் மட்டும்தான் வரவில்லை. என்போன்ற தயாரிப்பாளர்கள் படத்தின் ரிலீசுக்காக போராடுகிறார்கள். சாதாரணமாக கலைத்துறைக்கு வருகிறவர்களை கலைத்துறையில் உள்ளவர்களே நசுக்கிவிடுகிறார்கள். தயவு செய்து சிறு தயாரிப்பாளர், பெரிய தயாரிப்பாளர், புதியவன், பழையவன் என்று பாரபட்சம் பார்க்காதீர்கள்” என்றார்.
கே.ராஜன், “இந்த படத்தின் இயக்குனர் ஆதிராஜன் பத்திரிகையாளராக இருந்தபோது நிறைய கட்டுரைகள் எழுதியவர். இந்த படத்தின் தயாரிப்பாளர் வி.ராஜா நடிப்பதோடு நிறுத்திக்கொண்டால் 15 பெண்கள் கட்டிப்பிடிக்கத் தயாராக இருப்பார்கள். அவ்வளவு ஹேன்ட்சமா இருக்கிறார்” என்றார்.
தயாரிப்பாளர் கேயார், “இயக்குனர் ஆதிராஜன் என்னுடைய நீண்டநாள் நண்பர். நிறைய போராட்டத்திற்கு பிறகு இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். படம் ஜெயிப்பதற்கான நிறைய விஷயங்கள் படத்தில் இருக்கிறது. நான் இந்தப் படத்தை பார்த்துவிட்டேன். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்காகவே தேசிய விருது கிடைக்கும். அவார்டு மட்டுமின்றி ரிவார்டும் கிடைக்கும்”என்றார்.