‘கேமரா எரர்’ சினிமா விமர்சனம்

பளபளப்பான சினிமா துறையின் பின்னணியில், பெண்கள் சந்திக்கிற பாலியல் கொடுமைகளை படம்பிடித்துக் காட்டும் முயற்சி!

ஐந்து ஆண்கள் இரண்டு பெண்களை அழைத்துக் கொண்டு திரைப்படம் எடுக்க ஒரு மலைக்கிராமத்துக்கு போகிறார்கள். போன இடத்தில் இயக்குநர் ஒரு பெண்ணை ஆசைதீர அனுபவிக்கிறார். அதற்கு பரிசாக ஹீரோயின் வாய்ப்பு தருவதாக சொல்கிறார். ஆனால், அந்த வாய்ப்பை இன்னொரு பெண்ணுக்கு கொடுக்கிறார். அந்த பெண், இயக்குநர் மீது கோபம் கொள்கிறாள்; கொந்தளிக்கிறாள்.

ஹீரோயினாக நடிப்பவரை ஹீரோ கசக்கிப் பிழிகிறார். உடனிருக்கும் இளைஞர்களும் அவளை அனுபவிக்க துடிக்கிறார்கள்.

இப்படி பெண்களை சதையாக மட்டுமே பார்க்கிறவர்களை ஷூட்டிங் நடக்கும் வீட்டிலுள்ள ஏதோவொரு அமானுஷ்ய சக்தி மிரட்டத் தொடங்குகிறது. அதன் விளைவு என்ன என்பதே கேமரா எரரின் கதை.

நடிக்க வாய்ப்பு தருவதாக சொல்லி படுக்க மட்டுமே பயன்படுத்துகிறவர்களின் ஜெராக்ஸ் காப்பியாக நடித்திருக்கிறார் அகரன். படத்தை இயக்கியிருப்பதும் அவரே.வாய்ப்புக்காக தனது இளமையை விலையாகக் கொடுக்கும் கதாபாத்திரத்தில் ஹரிணி. ‘அடல்ஸ் ஒன்லி‘ கதைக்கு பெரிதும் உதவியிருக்கிறது அவரது சதை!

தமிழ் சினிமாவில் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு ஹீரோயின் வாய்ப்புகள் குறைவு. அந்த இலக்கணப்படி, படத்துக்குள் எடுக்கப்படும் படத்தில் வடமாநிலப் பெண் கதாநாயகியாக நடிப்பது போன்று திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். அந்த பாத்திரத்தை சுமந்திருக்கிற சிம்ரனின் வசன உச்சரிப்பு இரைச்சலாக இருப்பது தவிர நடிப்பில் குறையில்லை.

லைட்மேன் வேடத்தில் ‘ஓகே டேக்’ யூ டியூப் ராஜேஷ் அவ்வப்போது எட்டிப் பார்க்கிறார்.

பிரபாகரன், சுதிர் இருவரும் இயக்குநர் சொன்னதை செய்திருக்கிறார்கள்.

பல காட்சிகளில் பாலாஜி எஸ்.பி.யின் ஒளிப்பதிவில் அந்த மலைக்கிராமத்தின் பசுமையும் அழகும் கவர்கிறது!

காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் அவ்வளவாக ஈர்க்காவிட்டாலும், கலையுலகின் கருப்புப் பக்கங்களை காட்சித் தொகுப்பாக தந்திருக்கும் விதத்தில் கேமரா எரர் – பவர்!

Leave a Reply

Your email address will not be published.