எழுத்தாளர்களின் பிறந்தநாளில் செய்கூலி சேதார சலுகை வழங்கும் நிலக்கோட்டை மு.வ.  மாணிக்கம் நகைக்கடை! பெரியார் பிறந்தநாளில் அதிக நகை விற்ற ஆச்சரியம்!!

நடிகர்களின் கட் அவுட்களுக்கு பால் ஊற்றுவதில் தொடங்கி தனது அபிமான நடிகரின் படம் வெளியான மகிழ்ச்சியில் ஓடும் லாரியில் ஏறி நடனமாடி விழுந்து உயிர் விடுவது வரை வேதனை சம்பவங்கள் நடக்கும் தமிழ்நாட்டில், எழுத்தாளர்களைக் கொண்டாடும் விதத்தில் அவர்களின் பிறந்த நாளில் தங்களது நகைக்கடையில் செய்கூலி சேதாரம் இல்லாமல் நகைகள் விற்கும் அதிசயமும் நடக்கிறது.

கொடைக்கானல் மலையின் கீழ்ப் பகுதியிலுள்ள நிலக்கோட்டை மு.வ.  மாணிக்கம் அண்ட் கோ  தங்க நகை மாளிகையில்தான் மேலே சொன்ன அதிசயம் நடக்கிறது.

எப்படி இந்த யோசனை வந்தது? என நகை மாளிகை உரிமையாளர் ஸ்ரீதரிடம் கேட்டோம்.

“காலத்தைக் கடந்தும் வாழ்கிற நாட்டுக்கு உழைத்த தலைவர்களான அண்ணா, காமராஜர், பெரியார் போன்ற தலைவர்கள் பிறந்த நாளில் செய்கூலி சேதாரம் இல்லாமல் சலுகைகள் வழங்கினோம். அதன்பிறகு அறிவியல் அறிஞர்களின்  பிறந்த நாளில் சலுகைகள் வழங்கினோம்.

அந்த வரிசையில் எழுத்தாளர்களைக் கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு முழுக்க எழுத்தாளர்கள்  பிறந்த நாட்களில் நாங்கள் இந்தச் சலுகையை வழங்குகிறோம். அதற்கு முதன்முதலாக இலங்கை எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் பிறந்த நாளில் இந்த கொண்டாட்டத்தைத் தொடங்குகிறோம்” என்றார்.

இலங்கை எழுத்தாளர் அ.முத்துலிங்கம் முத்துலிங்கத்தை ஏன் தேர்வு செய்த காரணம்?
“இலங்கைத் தமிழர்கள் தமிழையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் உலகம் முழுக்கக் கொண்டு சேர்த்தவர்கள். எனவே அவர்கள் மேல் எனக்கு மதிப்பு உண்டு. எனக்குக் கொஞ்சம் வாசிப்பு ஆர்வம் உண்டு. அந்த வகையில் அ. முத்துலிங்கம் அவர்களது படைப்பை நான்  படித்த போது வியந்து போனேன். அவரது வாழ்க்கைப் பாதையும் அவர் படைத்த படைப்புகளும் எனக்கு மிகவும் ஆச்சரியம் அளித்தன.
நான் முதன் முதலில் அவரது ‘கடவுள் தொடங்கிய இடம்’ என்கிற நூலை படித்து விட்டு மிகவும் ஆச்சரியப்பட்டேன். அதன் பிறகு அவரைப் பற்றியும் அவரது வாழ்க்கையைப் பற்றியும் அறிந்த போது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.அவரது உயரம் கூடிக் கொண்டே போனது. அவ்வளவு அனுபவங்களைக் கொண்ட  அவரது வாழ்க்கை சாகசங்கள் நிரம்பியது போல் இருந்தது.எனவே உலக எழுத்தாளராக அவர் உயர்ந்திருக்கிறார். அந்த வகையில் முதலில் ஓர் இலங்கை எழுத்தாளரைக் கொண்டு தொடங்குவது என்று முடிவு செய்து அவரது பிறந்த நாளன்று சலுகைத் திட்டத்தை அறிவித்துள்ளோம்.
இந்த சலுகைத் திட்டத்தினால் வியாபாரம் ஆகிறதா? லாபமா நட்டமா என்று பார்த்தால் எங்களுக்குச் சிறிது பொருளாதார இழப்பு ஏற்படும் தான். மற்ற நகைக் கடைக்காரர்கள் எல்லாம் 916 நகைகளுக்கு செய்கூலி சேதாரம் என்று 10 லிருந்து 20 சதவிகிதம் வரை வாங்கும்போது நாங்கள் மட்டும் எதுவுமே வாங்காமல்  வாங்காமல் இந்த விற்பனையைச் செய்கிறோம். பொருளாதாரப் பின்னடைவை விட எங்களுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. அதனால் எங்களுக்குக் கிடைக்கும் மன நிறைவுக்கு எதுவும் ஈடாகாது. ஏனென்றால் நாட்டுக்கு உழைத்த தலைவர்களையும் இப்படிப்பட்ட எழுத்தாளர்களையும் நாங்கள் உயர்த்திப் பிடிக்கும் போது அவர்களைப் பற்றி மக்கள் மத்தியில் அவர்களின் புகழ் பரப்பிப் பேச வைக்கிறோம்.எழுத்தாளர்கள் பிறந்த நாளில் அவர்களின் பெருமையைக் கூறி அவர்களைப் பற்றி மக்களிடம் பேசவைக்கிறோம்.
வெறுமனே அவர்கள் பெயரில் இந்தச் சலுகையை மட்டும் வழங்காமல் அவர்கள் எழுதிய படைப்புகளை மக்களுக்குச் சலுகை நாளில் இலவசமாக வழங்குகிறோம். ஒரு சிறு நகை பில் போட்டால் கூட அவர்களுக்கு சம்பந்தப்பட்ட எழுத்தாளரின் படைப்பு இலவசமாக வழங்கப்படும். இப்போது தொடங்கியிருக்கும் எழுத்தாளர்களைக் கொண்டாடும் அந்நாட்களில் அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் அன்பளிப்பாக வழங்கப்படுகின்றன. இதை நாங்கள் அவர்களுக்குச் செய்யும் மரியாதையாகவும் ஒரு சமுதாயக் கடமையாகவும் நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம்.
யாருடைய பிறந்தநாளில் அதிகமான நகை விற்பனையானது?
சொன்னால் நம்ப மாட்டீர்கள் பெரியார் பிறந்த நாளில் தான் பெரிய அளவில் எங்கள் கடையில் நகைகள் விற்பனையானது. அந்த அளவிற்கு அவர் பேசப்படும் ஒரு தலைவராக இருக்கிறார் என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.ஜனவரியில் அ .முத்துலிங்கம் அவர்களின் பிறந்தநாளான ஜனவரி 19 ஐ முன்னிட்டு ஜனவரி 18 முதல் 20 வரை மூன்று நாட்கள் வழங்கும் இந்தச் சலுகை கொண்டாட்டத்தை  இந்த ஆண்டு முழுதும் பல்வேறு எழுத்தாளர்களைக் கொண்டாடும் வகையில் நாங்கள் வடிவமைத்திருக்கிறோம். அதற்குரிய ஒரு காலண்டரையும் நாங்கள் வெளியிட்டுள்ளோம்.
மக்கள் தங்கள் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ளும் வகையில் எந்த நாளில் இந்தச் சலுகை என்பதை முன்னரே அறிவிக்கும் வகையில் இந்தக் காலண்டர்களை நாங்கள் விநியோகம் செய்து வருகிறோம்” என்றார்.

இது பற்றி கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்திடம் கேட்டபோது, “நான் திரைப்பட நடிகர் இல்லை. அரசியல்வாதி இல்லை. பெரிய தொழிலதிபர் இல்லை. பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைவரில்லை. வேறு எந்த வகையிலும்  அரசியல் செல்வாக்கு கொண்டவருமில்லை .நான் ஒரு தமிழ் எழுத்தாளர்.மிகவும் எளியவன்.என் பிறந்த நாளை  முன்னிட்டு அவர்கள் இப்படிச் செய்யும் மகிழ்ச்சியை விட, ஒரு தமிழ் எழுத்தாளின் பிறந்தநாளை அவர்கள் இப்படிக் கொண்டாடுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

அந்தப் பெருமை  தமிழ் படைப்பாளிகளுக்குரியது,தமிழ் மொழிக்கு உரியது என்று நினைக்கிறேன். இதை அவர்கள் தொடர்ச்சியாகச் செய்வது இலக்கியப் படைப்பாளிகளுக்கு புத்துணர்வூட்டும் ஒரு நல்ல காரியமாகும். இப்போதும் எனக்குத் தோன்றுவது இதுதான். நான் எழுதிக் கொண்டே இருப்பேன்; என்னிடம் உள்ளவை தீர்ந்து போகும் வரை எழுதுவேன்; எங்கோ என் படைப்பைத் தேடிப் படிக்கும் ஒரு வாசகன் இருக்கும் வரை  எழுதிக் கொண்டிருப்பேன்” என்றார்.
நிலக்கோட்டை ஊர் அறிமுகம்:-
திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பேரூராட்சியான நிலக்கோட்டைமதுரையில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் கொடைரோடு தாண்டி,  கொடைக்கானல் மலையின் கீழ்ப் பகுதியில் உள்ளது.

குளப்ப நாயக்கர்  இந்த நிலத்தில் கட்டிய கோட்டை என்பதால்தான் நிலக்கோட்டை என்று பெயர் வந்தது என வரலாற்று குறிப்பு உண்டு.

22

Leave a Reply

Your email address will not be published.