நவம்பர் 4-ல் ரிலீஸாகும் ‘ஓங்காரம்’ படத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கெதிரான ‘புலி’ப் பாய்ச்சல்!

‘அய்யன்’, ‘சேது பூமி ‘ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஏஆர். கேந்திரன் முனியசாமி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஓங்காரம்.’

படத்தின் இயக்குநரே கதையின் நாயகனாக நடிக்க, கதாநாயகியாக நடிகை வர்ஷா விஸ்வநாத் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஸ்ரீதர், மதன் துரைசாமி, ஜிந்தா, முருகன், ஏழுமலையான்,சிவக்குமார்,டெல்டா வீரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், ”மதுரை மாநகரை கதைக்கள பின்னணியாக கொண்டு இப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. மதுரையில் பிரபலமான தனியார் கல்லூரி ஒன்றில் உயர்கல்வி கற்கும் நாயகிக்கு, அக்கல்லூரியின் நிர்வாகத்தின் சார்பில் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அவரின் குரல், பணபலம், அதிகார பலத்தால் நசுக்கப்படுகிறது. இந்நிலையில் சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் சமூக செயற்பாட்டாளர் ‘புலி’ எனும் கதாபாத்திரத்திடம் தன்னுடைய மனக்குமுறலை வெளிப்படுத்துகிறார். நாயகிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக புலி எனும் கதாபாத்திரம் மேற்கொள்ளும் தொடர் போராட்டங்களும், அதிகாரத்திற்கு எதிரான நடவடிக்கைகளும் தான் படத்தின் திரைக்கதை” என்றார்.

சாம்.கே.ரொனால்ட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு வி.டி.பாரதி மற்றும் வி.டி.மோனிஷ் ஆகிய இரட்டையர்கள் இசையமைத்திருக்கிறார்கள். பல வெற்றிப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய ஞானகரவேல் இப்படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதி இருக்கிறார். கலை இயக்கத்தை ஜெயசீலன் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வி. எஸ். விஷால் மேற்கொண்டிருக்கிறார். கதையின் நாயகிக்கும், பெண்களின் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளித்து தயாராகி இருக்கும் இந்த படத்தை யெல்லோ சினிமாஸ் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஈ. கௌசல்யா பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் ரேகா மற்றும் கார்த்திகா ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றி இருக்கிறார்கள்.
தமிழகம் மட்டுமல்லாமல் ஓங்காரம் திரைப்படம் உலகம் முழுவதும் நவம்பர் 4ம் தேதி ரிலீசாகவிருக்கிறது.

 

 

24

Leave a Reply

Your email address will not be published.