முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும், தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும்… சமூக பாதுகாப்பு மாநாட்டில் 14 தீர்மானங்களை நிறைவேற்றிய ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.’

மக்களாட்சியைப் பாதுகாப்போம்‘ என்ற முழக்கத்துடன் கடந்த 26 ஜனவரி 2022 முதல் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், மாநாடு என பல்வேறு நிகழ்ச்சிகளை நாடு முழுவதும்பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக 24.7. 2022 அன்று சென்னை கொட்டிவாக்கம் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மாபெரும் சமூக பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பெண்கள், ஆண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டிற்கு மாநில துணைத்தலைவர் ஹாலித் முஹம்மது தலைமை தாங்கினார். சென்னை மண்டல தலைவர் ஃபக்கீர் முஹம்மது வரவேற்றார்.

தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முஹம்மது யூசுஃப், மாநில பொதுச்செயலாளர் முகைதீன் அப்துல் காதர், செயலாளர்கள் நாகூர் மீரான், சாகுல் ஹமீது, பொருளாளர் இப்ராஹிம் பாதுஷா, செயற்குழு உறுப்பினர்கள் முஹம்மது இஸ்மாயில், சஃபியுல்லாஹ், முஹம்மது ரஃபீக் ராஜா, ரியாஸ் அஹமது, இப்ராஹிம் உஸ்மானி, அப்துர் ரஹ்மான், சென்னை மண்டல செயலாளர் அஹமது முகைதீன், வட சென்னை மாவட்ட தலைவர் அப்துல் ரஹ்மான், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சதக்கத்துல்லாஹ், திருவள்ளூர் மாவட்ட தலைவர் முஹம்மது ஃபிர்தவுஸ், எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில பொதுச்செயலாளர் அச.உமர் ஃபாரூக், பொருளாளர் அமீர் ஹம்சா, வர்த்தக அணி மாநில தலைவர் கிண்டி அன்சாரி, சென்னை கிழக்கு மண்டல தலைவர் ஏ.கே.கரீம், வடக்கு மண்டல தலைவர் முகம்மது ரசீது,கேம்பஸ் ஃப்ரண்ட் மாநில தலைவர் அஸ்ரஃப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீதான வரிவிதிப்பினை (ஜி.எஸ்.டி.) உடனடியாக திரும்பப் பெற்றிட வேண்டும்.

2.கலவரங்களை தடுப்பதற்கு புதிய அமைப்பை மாநில அரசாங்கம் உருவாக்க வேண்டும்.

3. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் போதைப் பொருளுக்கு எதிரான கண்காணிப்புக் குழுவினை அமைத்திட வேண்டும்.

4.தமிழக முஸ்லிம்களின் சமூக பொருளாதார சூழல் குறித்தான புள்ளி விவரங்களை ஆண்டுதோறும் வெளியிட வேண்டும்.

5. முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்.

6. முஸ்லிம்கள் வழிபாட்டு தலங்கள் கட்டுவதில் உள்ள நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்.

7.தேச துரோக சட்டத்தினை திரும்பப் பெற்றிட வேண்டும்.

8.தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அவர்களை ஒன்றிய அரசு திரும்ப பெற்றிட வேண்டும்.

9.எழுத்தாளர்கள் ,பத்திரிக்கையாளர்கள், அமைப்புகள் மீது அரசு நிறுவனங்களை ஏவிவிடும் ஒன்றிய அரசுக்கு கண்டனம்.

10. எதிர் வரக்கூடிய மழைக்காலத்தினைக் கருத்தில் கொண்டு மாநகராட்சி பகுதிகளில் முறையான வடிகால் அமைப்புகளை ஏற்படுத்தி குறிப்பாக சென்னை போன்ற பகுதிகளில் ஒவ்வொரு வருடமும் எதிர்கொள்ளக் கூடிய வெள்ளம் போன்ற அபாயங்களிலிருந்து மக்களைக் காக்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்.

11.மருத்துவக் கனவை மனதில் ஏந்தி இருக்கும் தமிழக மாணவர்களின் உயிரை, ஒவ்வொரு வருடமும் குடித்துக் கொண்டிருக்கும் நீட் தேர்வினை முற்றிலுமாக ரத்து செய்வதற்கு ஒன்றிய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

12. முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் மற்றும் ஏழு தமிழர்களை விடுதலை செய்திட வேண்டும்.

13. ஜனநாயக சக்திகளின் ஒன்றுபட்ட போராட்டத்தால் மட்டுமே பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற முடியும் .வெறுப்பு மற்றும் பயத்தின் ஸ்பெக்டரை எதிர்த்துப் போராட முடியும்.

14. சிறப்பு முகாம் என்ற பெயரில் சித்திரவதை முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் ஏதிலியர் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் ஏதிலியர் முகாம்களை சிறை முகாம்கள் போல் கருதி நடத்துவதை கைவிட்டு காவல் துறை உளவுப் பிரிவின் ஆதிக்கமும் தலையீடும் இல்லாமல் செய்யப்பட வேண்டும்.

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் தேசிய பொதுச்செயலாளர் அணீஸ் அஹமது, மாநிலத் தலைவர் முஹம்மது சேக் அன்சாரி, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழக காங்கிரஸ் கமிட்டி திருநாவுக்கரசர், விசிக துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திரநாத், எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மன்சூர் காசிஃபி, கும்பகோணம் சுவாமிகள் திருவடி குடில் அடிகளார், தமிழ் புலிகள் கட்சி நிறுவனர் நாகை திருவள்ளுவன், இந்திய தவ்ஹீத் ஜமாத் துணைத்தலைவர் முஹம்மது முனீர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி மாநில பொதுச்செயலாளர் பாலன், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் டாக்டர். ஆபிரூதீன் மன்பயீ, சமுதாய ஆர்வலர் ஏ.கே. முஹம்மது ஹனீஃபா, நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஆசியா மரியம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

நிறைவாக தென் சென்னை மாவட்டத் தலைவர் அபுபக்கர் சாதிக் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp