‘புராஜக்ட் சி – சாப்டர் 2′ சினிமா விமர்சனம்

இந்தியாவின் முதல் Sophomore திரைப்படம் என்ற பெருமையோடு ரிலீஸாகியிருக்கிறது ‘புரொஜக்ட் சி – சாப்டர் 2.’
மூன்று பாகங்களாக எடுக்கப்பட்டு, இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிட்டு புதுமை செய்திருக்கிறார்கள். அதைத்தான் Sophomore என்று குறிப்பிடுகிறார்கள்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, பேசும் திறன் இழந்து, படுக்கையில் வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருக்கிறார் அந்த பெரியவர்.
அவரது வீட்டில் ஒரு பெண் சமைத்தல், துவைத்தல் உள்ளிட்ட வேலைகளைச் செய்கிறார்.
பெரியவரை கழிவறைக்கு கூட்டிச் செல்வது, குளிப்பாட்டுவது உள்ளிட்ட வேலைகளைச் செய்கிற ‘கேர் டேக்கர்’ பொறுப்பில் சேர்கிறான் ஒரு இளைஞன்.
பெரியவரை பிசியோதெரபிஸ்ட் ஒருவர் அவ்வப்போது வந்து கவனித்துக் கொள்கிறார்.
ஒரு கட்டத்தில் பெரியவரிடம் இருக்கும் பெரியளவிலான பணத்தைச் சுருட்ட கேர் டேக்கரும், வேலைக்காரப் பெண்ணும் திட்டமிடுகிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் பணத்தாசை பேராசையாக மாற அந்த பெண் அந்த இளைஞன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துகிறாள்.
பிசியோதெரபிஸ்ட் அவர் பங்குக்கு பெரியவரிடமுள்ள குறிப்பிட்ட ஒரு ஃபார்முலாவை அபகரிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.
யாருடைய திட்டம் நிறைவேறியது? பெரியவர் வசமுள்ள ஃபார்முலா எப்படிப்பட்டது? இதற்கான பதில்கள் அடுத்தடுத்த காட்சிகளில்… இயக்கம் வினோ.
கேர் டேக்கர் வேலையில் சேரும்போது பரிதாப நடிப்பு, வேலைக்காரப் பெண்ணுடன் உடலால் இணையும்போது இளமைத் துடிப்பு என நாயகன் ஸ்ரீயின் பங்களிப்பு கச்சிதம்.
என்னைப் பார், என் வளைவு நெளிவுகளைப் பார் என கவர்ச்சி விருந்தில் தாராளம் காட்டியிருக்கிறார் வசுதா கிருஷ்ணமூர்த்தி.
வழக்கமான காமெடியை ஒதுக்கிவிட்டு சற்றே மாறுபட்ட கதாபாத்திரத்தில் வருகிற சாம்ஸ் கதையோட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
மருந்து மாத்திரைகளைக் கண்டுபிடித்து மனிதர்கள் மீது பரிசோதிக்கும் விஞ்ஞானியாக ராம்ஜி. வயதில் கிழவர்; நடிப்பில் கிளவர்!
முன்னும் பின்னுமாக பயணிக்கும் கதையோட்டத்திற்கேற்ப காட்சிகளை குழப்பமில்லாமல் வெட்டிக் கோர்த்திருக்கிறார் எடிட்டர் தினேஷ் காந்தி.
காட்சிகளின் தேவைக்கேற்ப பின்னணி இசை தந்திருக்கிறார் சிபு சுகுமாரன்.
உருவாக்கத்தில் சிலபல குறைகள் இருந்தாலும் சிறிய பட்ஜெட்டில், எளிமையான நடிகர்களின் பங்களிப்பில் தமிழ் திரையுலகத்திற்கு வித்தியாசமான படம் என்ற வகையில் வரவேற்கலாம்!
SpiralNews.in ரேட்டிங் 3 / 5
கருத்துக்களைப் பகிர: spiralnewss@gmail.com